என் மலர்
இந்தியா

போலீசுக்கு பயந்து ஓடி பாதாள சாக்கடைக்குள் குதித்த ஆட்டோ டிரைவர்
- போதையில் தள்ளாடியபடி வந்த அவர், வீட்டுக்குள் நுழைந்ததும் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
- பாதாள சாக்கடைக்குள் குதித்த பவன்குமாருக்கு என்ன ஆனது என்ற அச்சம், அவருடைய தாயாருக்கும் மனைவிக்கும் ஏற்பட்டது.
ஆக்ரா:
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரைச் சேர்ந்தவர், பவன்குமார் (வயது 28) ஆட்டோ டிரைவர். தாஜ்கஞ்ச் என்ற பகுதியில் மனைவி மது, தாய் திரிவேணி தேவி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
பவன் குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் வந்து சண்டை போடுவது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று இரவு 'ஆட்டோ ரைடை' முடித்துவிட்டு, நன்றாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.
போதையில் தள்ளாடியபடி வந்த அவர், வீட்டுக்குள் நுழைந்ததும் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டினார். அதை பொறுக்க முடியாமல் அவருடைய மனைவியும் பதிலுக்கு வாக்குவாதம் செய்தார். சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது.
ஆத்திரமடைந்த பவன்குமார் மனைவியை அடிக்க எத்தனித்தார். அப்போது அவருடைய தாயார் திரிவேணி தேவி குறுக்கிட்டு, மருமகளை கைநீட்டி அடிக்க துணிந்த பவன்குமாரை தடுத்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. தாயை தள்ளிவிட்டு, மனைவி மதுவை அடிக்க முயன்றார்.
இதனால் திரிவேணி தேவி வேறு வழியில்லாமல், மகன் என்றும் பாராமல் அவசர போலீஸ் 112-க்கு போன் செய்தார். சிறிது நேரத்தில் அங்கு போலீஸ் விரைந்து வந்தது. போலீஸ் வேனின் 'சைரோன்' சத்தம் கேட்டதும், பவன்குமாருக்கு கதிகலங்கியது.
அவர்கள் கைகளில் சிக்கினால் தர்ம அடி கிடைத்துவிடும் என்ற பயத்தில் வீட்டைவிட்டு தெருவுக்கு ஓடினார். அவர் வெளியே வரவும், போலீஸ் வேன் வந்து அங்கு நிற்கவும் சரியாக இருந்தது.
கடுமையான போதையில் இருந்த பவன்குமார், வேறு வழி தெரியாமல் தெருவில் அரைகுறையாக திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் குதித்துவிட்டார்.
வேனைவிட்டு தடபுடலாக இறங்கிய போலீசார், பாதாள சாக்கடை குழாய்க்குள் எட்டிப் பார்த்தனர். இருட்டில் எதுவும் தெரியவில்லை. நடந்தது பற்றி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் தலைமையில் மேலும் சில போலீசார் அங்கு விரைந்து வந்தனர். 'டார்ச் லைட்' மற்றும் மோட்டார் சைக்கிள் 'ஹெட் லைட்' உதவியுடன் சாக்கடைக் குழாய்க்குள் தேடிப் பார்த்தனர். ஆனால் பவன்குமார் உள்ளே இருப்பதாகத் தெரியவில்லை.
பாதாள சாக்கடைக்குள் குதித்த பவன்குமாருக்கு என்ன ஆனது என்ற அச்சம், அவருடைய தாயாருக்கும் மனைவிக்கும் ஏற்பட்டது. இருவரும் அழத் தொடங்கினார்கள்.
உடனே போலீசார் புல்டோசரை வரவழைத்து, பாதாள சாக்கடை குழாயை உடைக்கச் செய்தனர். சுமார் 4 மணி நேரம் அந்தப் பணி நடந்தது. சாக்கடை மண்தான் வெளியே அள்ளப்பட்டதே தவிர, பவன்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் முயற்சியை கைவிட்டுவிட்டு இரவோடு இரவாக போலீசார் ஸ்டேஷனுக்கு திரும்பிவிட்டனர்.
பொழுது விடிந்தது. பவன்குமார் வீட்டில் அவருடைய தாயும், மனைவியும் சோகமாக இருந்தனர். குடிகாரர் என்றாலும் மகனை இழக்க ஒரு தாயோ, கணவரை இழக்க ஒரு மனைவியோ, யார்தான் விரும்புவார்கள்?
இவ்வாறாக அங்கு நீடித்த சோகம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. மதியம் திடீர் என்று பவன்குமார் வீட்டுக்குள் வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் தாய், மனைவி இருவரும் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.
எங்கே போனாய் எப்படி வந்தாய்? என்று மகனிடம் தாயார் ஆவலுடன் கேட்க, சாக்கடை குழாய் வழியாக நுழைந்து சென்று, வேறு ஓர் இடத்தில் உள்ள ஒரு சாக்கடை குழாய் வழியாக வெளியே வந்ததாக தெரிவித்தார்.
சாக்கடையில் புரண்ட அவரது அலங்கோல தோற்றம் அதை உறுதிப்படுத்தியது. கணவர் உயிரோடு திரும்பி வந்தது, மகிழ்ச்சியும் திரும்பி வந்ததாக மது தெரிவித்து இருக்கிறார். இன்னமும் அவர் குடிக்கத்தான் செய்கிறார். இருந்தாலும் என்னுடன் சண்டையிட்டதற்காக அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார். அவரை தண்டிக்க தேவையில்லை என்று அந்த நல்ல மனைவி தெரிவித்து இருக்கிறார்.






