என் மலர்
இந்தியா

சர்ச்சை பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது கிரிமினல் அவமதிப்பு வழக்குத் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி!
- இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார்
- நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மசோதாக்களை நிலுவையில் வைத்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சாடி இருந்தனர்.
சுப்ரீம் கோர்ட் சூப்பர் பாராளுமன்றம் போல செயல்படுகிறது என தன்கர் தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டே சட்டங்களை இயற்ற வேண்டி இருந்தால் பாராளுமன்ற கட்டிடத்தை இழுத்து மூட வேண்டும். இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே மீது குற்றவியல் அவமதிப்பு வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீதிமன்றத்திற்கும் இந்திய தலைமை நீதிபதிக்கும் (CJI) எதிரான கருத்துக்களுக்காக துபே மீது கிரிமினல் அவமதிப்பு வழக்குத் தொடர உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோரினார். இதை கேட்ட நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் மத்திய அரசின் உயர் சட்ட அதிகாரியான அட்டர்னி ஜெனரலின் (ஏஜி) ஒப்புதலைப் பெற வேண்டும்.
"எனவே நீங்கள் மனுத்தாக்கல் செய்யுங்கள். தாக்கல் செய்வதற்கு, எங்கள் அனுமதி உங்களுக்குத் தேவையில்லை. உங்களுக்கு ஏஜியின் அனுமதி தேவைப்படும்" என்று நீதிபதி பி.ஆர். கவாய் கூறினார். இதன்மூலம் துபே மீது வழக்குத் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.






