என் மலர்
இந்தியா

சர்ச்சையாகும் தகுதி நீக்க மசோதா.. கட்சியை மீறிய சசி தரூர் - சொன்னது இதுதான்!
- அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தபோது மக்களவையில் எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசி எறிந்தனர்.
- தவறு செய்தால் ஒருவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்பது மிகவும் தர்க்கரீதியானது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர், கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் எதிர்த்துப் பேசியுள்ளார்.
மத்திய அரசு இன்று மக்களவையில் தாக்கல் செய்த தகுதி நீக்க மசோதா, பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் இருந்தால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறுகிறது.
அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தபோது மக்களவையில் எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசி எறிந்தனர்.
'இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றுபட்டுள்ள நிலையில், சசி தரூர் வித்தியாசமாக பதிலளித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "30 நாட்கள் சிறையில் இருந்த ஒருவர் எப்படி அமைச்சராகத் தொடர முடியும்? இது மிகவும் பொதுவான விஷயம். இதில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை" என்றார்.
தவறு செய்தால் ஒருவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்பது மிகவும் தர்க்கரீதியானது என்று அவர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இது நமது ஜனநாயகத்திற்கு நல்லது என்று தான் கருதுவதாக அவர் கூறினார்
இருப்பினும், மசோதாவை இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை என்றும், அவரது கருத்து இறுதியானது அல்ல என்றும் சசி தரூர் தெளிவுபடுத்தினார்.
சந்தேகங்களைத் தீர்த்து, அது குறித்து ஆழமான விவாதம் நடத்த மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (ஜேபிசி) அனுப்ப வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.






