search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதல்வர்களை தேர்வு செய்ய நீங்கள் 10 நாட்கள் வரை எடுக்கவில்லையா? பாஜக-வுக்கு காங்கிரஸ் பதிலடி
    X

    முதல்வர்களை தேர்வு செய்ய நீங்கள் 10 நாட்கள் வரை எடுக்கவில்லையா? பாஜக-வுக்கு காங்கிரஸ் பதிலடி

    • முதல்வரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
    • பாஜகவின் போலிச் செய்தி தொழிற்சாலைக்கு ஊடகங்களின் ஒரு பகுதி பலியாகி விட்டது.

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வரை தேர்வு செய்யும் பணியில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது தொடர்பாக பல்வேறு யூகமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

    முதல்வரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் (கர்நாடகா பொறுப்பாளர்) ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-

    பாஜகவின் போலிச் செய்தி தொழிற்சாலைக்கு ஊடகங்களின் ஒரு பகுதி பலியாகி விட்டது. பாஜக பல மாநிலங்களில் முதல்வர்களை தேர்வு செய்வதற்காக 7 முதல் 10 நாட்கள் எடுத்துக் கொண்டபோது, பிரதமரிடம் இதேபோல் கேள்வி எழுப்பினார்களா? ஆனால் அதே நபர்கள், ஒரு குறிப்பிட்ட ஊடகங்கள், உண்மையான ஜனநாயக மரபுகளின்படி செயல்படும் மல்லிகார்ஜுன் கார்கேவின் செயல்முறைக்கு ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளன.

    கர்நாடக சகோதர சகோதரிகளால் நிராகரிக்கப்பட்ட பாஜகவின் விரக்தி எங்களுக்கு புரிகிறது. முதல்வர் தேர்வு விவகாரம் தொடர்பாக இங்கிருந்து காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அறிக்கை வெளியிட வேண்டாம். யாராவது கருத்து தெரிவித்தால் ஒழுக்கமின்மையாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×