search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசத்தில் தனித்து களம் இறங்கும் இடதுசாரிகள்- இந்தியா கூட்டணியில் மோதல் வலுக்கிறது
    X

    ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசத்தில் தனித்து களம் இறங்கும் இடதுசாரிகள்- இந்தியா கூட்டணியில் மோதல் வலுக்கிறது

    • குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக 2 கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
    • வரும் அனைத்து தேர்தல்களிலும் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா வியூகம் வகுத்து வருகிறது.

    இதை தடுக்கவும், பாரதிய ஜனதா அரசை வீழ்த்தவும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டணியை அமைத்தன.

    காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க., சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சி கள் இணைந்த இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 3 முறை நடைபெற்றுள்ளது.

    இதில் பாராளுமன்ற தேர்தலை ஒருங்கிணைந்து சந்திப்பது தொடர்பாக எதிர்கட்சிகள் கூடி விவாதித்தன.

    இந்நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

    இதே போல ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்தது. இதிலும் சரியான உடன்பாடு ஏற்படவில்லை.

    தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையிலும், குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக 2 கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு போதிய இடங்களை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதனால் கூட்டணியில் மோதல் வெடித்தது. எனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள இடது சாரிகள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ராஜஸ்தானில் 17 இடங்களிலும், சத்தீஸ்கரில் 3 இடங்களிலும், மத்திய பிரதேசத்தில் 4 இடங்களிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

    இதே போல இந்திய கம்யூனிஸ்டு கட்சி சத்தீஸ்கரில் 16 இடங்களிலும், ராஜஸ்தானில் 12 இடங்களி லும், மத்திய பிரதேசத்தில் சுமார் 9 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக இடது சாரி மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.

    இதற்கிடையே தெலுங்கானாவிலும் 2 கட்சிகளும் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இதில் 2 கட்சிகளுக்கும் அங்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது.

    இதில் வரும் அனைத்து தேர்தல்களிலும் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×