என் மலர்
இந்தியா

விபத்தில் சிக்கிய லாரி மற்றும் காரை காணலாம்.
பாலக்காட்டில் லாரி மீது கார் மோதி விபத்து- 5 பேர் பலி
- காருக்குள் இருந்தவர்கள் படுகாயமடைந்து பலியாகினர்.
- விபத்தில் சிக்கிய வாகனங்கள் கிரேன் முலமாக சாலையில் இருந்து அகற்றப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது கல்லடிக்கோடு. இந்த பகுதி பாலக்காடு-கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது. இந்த சாலையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் பாலக்காட்டில் இருந்து ஒரு கார் வந்தது.
அந்த காரும், எதிர் திசையில் கோவை நோக்கி சென்ற சரக்கு லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் காரின் முன்பகுதி முற்றுலுமாக சேதமடைந்தது. காருக்குள் இருந்தவர்கள் படுகாயமடைந்து பலியாகினர்.
இந்த விபத்தில் காரில் இருந்த கேரளா கோங்காடு மண்ணாறு பகுதியை சேர்ந்த விஜேஷ்(வயது35), விண்டபாறையை சேர்ந்த ரமேஷ்(31), விஷ்ணு(30), முகம்மது அப்சல்(17), பாலக்காடு தச்சம்பாறையை சேர்ந்த மகேஷ் ஆகிய 5 பேர் பலியானார்கள்.
இந்த பயங்கர விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். காருக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
பின்பு அதனை பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்கள் கிரேன் முலமாக சாலையில் இருந்து அகற்றப்பட்டது.
கனமழையால் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியில் மோதி விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் நடந்த இந்த கோர விபத்து பாலக்காடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பாலக்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சியினர் இன்று ரத்து செய்தனர்.






