என் மலர்
இந்தியா

நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்.. அகமதாபாத்தில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்
- விமானத்தில் 180 பயணிகள் உட்பட மொத்தம் 186 பேர் இருந்தனர்.
- மோப்ப நாய் படை உதவியுடன் விமானம் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டது.
குவைத்தில் இருந்து டெல்லி நோக்கிப் பயணித்த இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டலால் அகமதாபாத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் 180 பயணிகள் உட்பட மொத்தம் 186 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, கழிவறையில் இருந்த ஒரு டிஷ்யூ பேப்பரில் எழுதப்பட்ட மிரட்டல் குறிப்பை விமான ஊழியர்கள் கண்டெடுத்தனர்.
அதில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், விமானம் கடத்தப்படும்என்றும் எழுதப்பட்டிருந்தது.
பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றிய விமானி, அகமதாபாத் விமானக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினார்.
விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மோப்ப நாய் படை உதவியுடன் விமானம் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டது.
சோதனையின் முடிவில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், இது ஒரு போலி மிரட்டல் என்றும் தெரியவந்துள்ளது. பயணிகள் மாற்று விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.






