என் மலர்
இந்தியா

பாஜக-வின் உத்தி கூட்டணி கட்சிகளை ஓரங்கட்டுவது: மகாராஷ்டிராவில் அரங்கேறி வருகிறது- கபில் சிபல் எச்சரிக்கை
- எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பார்கள்.
- இறுதியாக ஆட்சிக்கு வந்தபிறகு, அவர்களை ஓரங்கட்டி விடுவார்கள்.
இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல், பாஜக-வின் உத்தி ஆட்சியை பிடிப்பதோ, மெஜாரிட்டி பெறுவதோ அல்ல. மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதிகாரத்திற்கு வந்து, அந்த கட்சிகளை ஓரங்கட்டுவதுதான் என எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக கபில் சிபல் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பாஜக-வின் அரசியல் உத்தி: மாநிலங்களில் அவர்கள் அதிகாரத்திற்கு வருவது அல்லது மெஜாரிட்டி பிடிக்க வேண்டும் என்பதல்ல. மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, அதிகாரத்திற்கு வந்து, பின்னர் அந்த கட்சிகளை ஓரங்கட்டுவதுதான்.
இந்த உக்தி பீகாரில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் அரங்கேறி வருகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்களின் சந்திப்பின்போது அவர் தெரிவித்ததாவது:-
மகாராஷ்டிரா மாநில மாநகராட்சி தேர்தல் சில தகவல்களை அந்த மாநிலத்திற்கும், தேசிய அளவிலான தேர்தலுக்கும் கொடுத்துள்ளது.
இந்த நேரத்தில் மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் 74 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் முக்கியமானது என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த மாநகராட்சி தேர்தலில், சிவ சேனா ஒருங்கிணைந்து இருந்த நேரம், மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார்கள். தலைமை பொறுப்பில் இருந்தார்.
2012-ல் பாஜக வெறும் 31 இடங்களைத்தான் பெற்றது. 2017-ல் அவர்கள் 82 இடங்களை பிடித்தார்கள். தற்போது 89 இடங்களை பிடித்துள்ளனர். சிவசேனா 2012-ல் 74 இடங்களையும், 2017-ல் 84 இடங்களையும், தற்போது 29 இடங்களையும் பிடித்துள்ளது.
காங்கிரஸ் 2012-ல் 52 இடங்களையும், 2017-ல் 31 இடங்களையும், தற்போது 24 இடங்களையும் பிடித்துள்ளது. 2012-ல் என்சிபி 13 இடங்களையும், 2017-ல் 9 இடங்களையும், தற்போது 3 இடங்களையும் பிடித்துள்ளது. எம்என்ஸ் 2012-ல் 28 இடங்களையும், 2017-ல் 7 இடங்களையும், தற்போது 6 இடங்களையும் பிடித்துள்ளது. இது பாஜக-வை தவிர்த்து அனைத்து கட்சிகளும் இறங்கு முகத்தில் உள்ளன என்பதை காட்டுகிறது.
அவர்கள் எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பார்கள். இறுதியாக ஆட்சிக்கு வந்தபிறகு, அவர்களை ஓரங்கட்டி விடுவார்கள்.
இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்.






