search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசியல் சாசனத்தை மாற்ற பாஜகவிற்கு பெரும்பான்மை வேண்டும்: பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தா
    X

    அரசியல் சாசனத்தை மாற்ற பாஜகவிற்கு பெரும்பான்மை வேண்டும்: பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தா

    • வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார்
    • இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும் - பாஜக எம்.பி ஆனந்த குமார்

    வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார்.

    அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என ராஜஸ்தான் மாநிலம் நாகூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோதி மிர்தா மக்களிடையே பேசுகையில், "அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும். அதற்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பலம் வேண்டும். அதற்கு பெரியளவில் பெரும்பான்மை பெற்று இம்முறை நாம் வெற்றி பெற வேண்டும்" என கூறியுள்ளார்.

    இதற்கு முன்னதாக இதே போல அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கர்நாடகா பாஜக எம்.பி அனந்த் குமார் ஹெக்டே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மார்ச் 9-ம் தேதி கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தின் சித்தாபுராவில் உள்ள ஹலகேரி என்ற கிராமத்தில், முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க எம்.பியுமான அனந்த் குமார் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

    அப்போது, "வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும். இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி ஏன் கூறினார். தற்போது மக்களவையில் 2/3 பெரும்பான்மையாக நாம்தான் இருக்கிறோம். ஆனால், மாநிலங்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. மாநில அரசுகளிலும் நமக்குத் தேவையான பெரும்பான்மை இல்லை.

    எனவே, அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநில அரசுகளிலும் கணிசமான பெரும்பான்மையைப் பெறுவது அவசியம். இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும். அதற்கு, இந்த பெரும்பான்மை போதாது." எனப் பேசினார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையானது.

    இதனையடுத்து 6 முறை எம்.பி ஆக இருந்த ஆனந்த குமாருக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பெரும்பான்மை பெற பாஜக விரும்புவதன் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தியதும் ஆனந்த் ஹெக்டேவை வேட்பாளர் பட்டியலிலிருந்து பாஜக நீக்கியது. இப்போது இன்னொரு பாஜக வேட்பாளர், அரசியல் சாசனத்தை மாற்றுவதே பாஜகவின் நோக்கமென வெளிப்படையாக பேசியிருக்கிறார். உண்மையை எத்தனை நாள் பாஜக மறைக்க முயலும்?" என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×