என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி பிறந்தநாள்- பாஜக தலைவர்கள் வாழ்த்து
- சுபத்ரா யோஜனா நிதி உதவித் திட்டம், ஒடிசா தேர்தல் அறிக்கையில் பாஜக அளித்த முக்கிய வாக்குறுதியாகும்.
- 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற அவரது உறுதியை நிறைவேற்ற அவருக்கு பலம் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று நரேந்திர தாமோதர்தாஸ் மோடி பிறந்தார். எளிமையான தொடக்கத்திலிருந்து இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக பிரதமர் மோடி உயர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி தனது 74வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பல தசாப்தகால பொது சேவையில் மேலும் ஒரு ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பிறந்தநாள் மற்ற நாட்களைப் போலவே, அவரது அதிகாரப்பூர்வ பொறுப்புகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. பா.ஜனதா கட்சியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் "சேவா பர்வ்" என்ற இரண்டு வார விழாவில், பொது நலனில் பிரதமரின் நீடித்த அர்ப்பணிப்பு மற்றும் மனித குலத்திற்கு சேவை செய்யும் அவரது தத்துவத்தை எடுத்துரைக்கும் மேடையாக இந்நிகழ்வு விளங்குகிறது.
பிரதமர் மோடி தனது 74வது பிறந்தநாளில் புவனேஸ்வரில் உள்ள கடகனாவில் 26 லட்சம் பிரதமர் ஆவாஸ் யோஜனா வீடுகளை திறந்து வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
புவனேஸ்வர் விமான நிலையத்தை வந்தடைந்ததும், பிரதமர் மோடி சைனிக் பள்ளிக்கு அருகில் உள்ள கடகனா குடிசைப் பகுதிக்கு செல்வதாக புவனேஸ்வர் போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் பாண்டா உறுதி செய்தார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி ஜனதா மைதானத்திற்குச் செல்கிறார், அங்கு அவர் சுபத்ரா யோஜனாவைத் தொடங்கி வைக்க உள்ளார். இதன் கீழ் 1 கோடிக்கும் அதிகமான ஏழைப் பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10,000 ரூபாய் ஐந்தாண்டு காலத்திற்கு இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.
சுபத்ரா யோஜனா நிதி உதவித் திட்டம், ஒடிசா தேர்தல் அறிக்கையில் பாஜக அளித்த முக்கிய வாக்குறுதியாகும்.
இதனுடன், 2,871 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களையும், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில்,
"பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
"பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா பொருளாதார வல்லரசாக மாறுகிறது. 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற அவரது உறுதியை நிறைவேற்ற அவருக்கு பலம் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
பிரதமர் மோடியின் தீர்மானத்தை நிறைவேற்ற மகாராஷ்டிராவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. 5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடு, 21வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என்று நான் கூற விரும்புகிறேன், ஏனெனில் நாட்டின் கேப்டன் பிரதமர் மோடி, அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா, மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.






