search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்றத்தில் அநாகரீகமாக பேசியதாக சர்ச்சை: பா.ஜ.க. எம்.பி.யிடம் விளக்கம் கேட்டு மேலிடம் நோட்டீஸ்
    X

    பாராளுமன்றத்தில் அநாகரீகமாக பேசியதாக சர்ச்சை: பா.ஜ.க. எம்.பி.யிடம் விளக்கம் கேட்டு மேலிடம் நோட்டீஸ்

    • ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் உள்ளிட்டோரும் ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்
    • பாராளுமன்ற உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது குறுக்கிட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.டேனிஷ் அலியை தகாத வார்த்தைகளால் தெற்கு டெல்லி பா.ஜ.க. எம்.பி ரமேஷ் பிதூரி விமர்சித்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் அவையில் வருத்தம் தெரிவித்தார். ரமேஷ் பிதூரி எம்.பி. பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுமாறு அவைத்தலைவருக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கு, அந்த வார்த்தைகளை ஏற்கனவே அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விட்டதாக அவையை நடத்திய காங்கிரஸ் எம்.பி. கே.சுரேஷ் தெரிவித்தார்.

    எனினும் ரமேஷ் பிதூரியை அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார்.

    இந்த விவகாரத்தில் ரமேஷ் பிதூரிக்கு எதிராக சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா கேள்வி எழுப்பினார். இதையடுத்து, "இனிமேல் இதுபோல் நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என ரமேஷ் பிதூரிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்தார்.

    ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் உள்ளிட்டோரும் ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்த விவகாரத்தை பாராளுமன்ற உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

    பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி கூறும்போது, "எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். சபாநாயகர் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிடில் அவைக்கு வராமல் இருப்பது குறித்து யோசித்து வருகிறேன். ஏனென்றால் இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது" என்றார்.

    இந்நிலையில் மக்களவையில் பேசியது தொடர்பாக ரமேஷ் பிதூரிக்கு பா.ஜ.க. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவின் அறிவுரைப்படி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×