search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜனதா ஆட்சியை கைப்பற்ற அலையும் கட்சி அல்ல: ஏக்நாத் ஷிண்டே
    X

    பா.ஜனதா ஆட்சியை கைப்பற்ற அலையும் கட்சி அல்ல: ஏக்நாத் ஷிண்டே

    • சிவசேனாவில் ஏற்பட்ட பிளவின் காரணமாக மகா விகாஸ் ஆட்சி கவிழ்ந்தது.
    • நான் முதல்-மந்திரியாக வரவேண்டும் என்பதற்காக சிவசேனா தலைமையை எதிர்க்கவில்லை.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சியை கைப்பற்ற போதுமான இடம் இருந்தபோதும், முதல்-மந்திரி பதவிக்கான போட்டியால் இந்த கூட்டணி உடைந்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியது. அப்போது பா.ஜனதா முதல்-மந்திரி பதவி குறித்து அளித்த வாக்குறுதியை மீறிவிட்டதாக உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார்.

    இந்தநிலையில் சிவசேனாவில் ஏற்பட்ட பிளவின் காரணமாக மகா விகாஸ் ஆட்சி கவிழ்ந்தது. பா.ஜனதாவின் துணையுடன், சிவசேனா அதிருப்தி அணியினர் ஆட்சியை கைப்பற்றினர்.

    ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியானார். அவர் முதல்-மந்திரியாகி 41 நாட்கள் கழிந்து மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தானே மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நிருபர்களிடம் பேசியதாவது:-

    என்னை முதல்-மந்திரி ஆக்கியதன் மூலமாக பா.ஜனதா மூத்த தலைவர்கள் பெரிய மனதை நிரூபித்துள்ளனர். பா.ஜனதா எப்போதும் ஆட்சியை அபகரிக்க அலைவதில்லை.

    மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினேன்.

    அப்போது, அமித்ஷா என்னிடம் பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு பா.ஜனதாவை விட குறைந்த எண்ணிக்கை இருந்தபோதும் நிதிஷ் குமாரை அங்கு முதல்-மந்திரி ஆக்கினோம்.

    நாங்கள் உங்கள் கட்சிக்கு(சிவசேனா) முதல்-மந்திரி பதவி குறித்து வாக்கு கொடுத்திருந்தால் அதில் இருந்து ஏன் பின்வாங்க போகிறோம் என்று என்னிடம் கூறினார்.

    மகாராஷ்டிரா மக்கள் 2019-ம் ஆண்டு பா.ஜனதா, சிவசேனா கூட்டணிக்கு தெளிவாக ஆட்சி அமைக்க அதிகாரம் வழங்கினர். ஆனால் பின்னர் நிலைமை சரியான திசையில் செல்லவில்லை. உத்தவ் தாக்கரேவிடம் இதுகுறித்து நான் பலமுறை விளக்கினேன். ஆனால் எல்லாம் வீணானது. இதுபோன்ற சூழ்நிலையில் எதிர்காலத்தில் வாக்காளர்களை நம்மால் எதிர்கொள்ள முடியாது என்றும் நான் அவரிடம் கூறியிருந்தேன்.

    நான் முதல்-மந்திரியாக வரவேண்டும் என்பதற்காக சிவசேனா தலைமையை எதிர்க்கவில்லை. மக்கள் எனக்கு கொடுத்த அன்பும், பாசமும் தான் சிவசேனா தலைமைக்கு எதிரான செயல்பாட்டுக்கு பிறகு நான் எதிர்கொண்ட விமர்சனங்களுக்கு பதிலாகும்.

    அநீதிக்கு எதிராக போராடுவதற்கு சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரே மற்றும் ஆனந்த் திகே ஆகியோரின் போதனைகளை நாங்கள் பெற்றுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×