என் மலர்
இந்தியா

பீகார் பாஜக எம்.எல்.ஏ.-வுக்கு கிரிமினல் வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை: பதவி இழக்கும் அபாயம்..!
- 2019ஆம் ஆண்டு ஒருவரை தாக்கி பணம் பறித்ததாக வழக்கு.
- 2 ஆண்டு சிறைத்தண்டனையுடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மிஷ்ரி லால் யாதவ்.
மிஷ்ரி லால் யாதவ், தனது உதவியாளருடன் சேர்ந்து தன்னை அடித்து உதைத்து பணம் பறித்ததாக பக்கத்து வீட்டுக்காரர் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் நேற்று நீதிமன்றம் பாஜக எம்.எல்.ஏ. மிஷ்ரி லால் யாதவ் மற்றும் அவரது உதவியாளருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அபாரத தொகையை செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
2 வருட தண்டனை தொடர்பாக எம்.எல்.ஏ. மிஷ்ரி லால் யாதவ் கூறுகையில் "நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பு அளிக்கிறேன். ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு தொடர்பாக அறிக்கை கிடைத்த பின்னர் தகுதி நீக்கத்திற்கான பணி தொடங்கப்படும் என பீகார் சட்டமன்ற செயலாளர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.






