என் மலர்
இந்தியா

பீகார் சட்டசபை தேர்தல்: வேண்டுமென்றே மின்சாரம் துண்டிப்பு - தேர்தல் ஆணையம் மீது RJD குற்றச்சாட்டு
- பாட்னாவில் வாக்குச்சாவடி மற்றும் பிற ஏற்பாடுகளை டிஎஸ்பி அனு குமாரி ஆய்வு செய்தார்.
- ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. காலை 11 மணி நிலவரப்படி 27.7 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மதியம் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கை பதிவு செய்தார். பீகார் சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவ் பாட்னா சாஹிப் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பாட்னாவில் வாக்குச்சாவடி மற்றும் பிற ஏற்பாடுகளை டிஎஸ்பி அனு குமாரி ஆய்வு செய்தார்.
பீகாரில் நடைபெற்று வரும் முதல்கட்ட வாக்குப்பதிவை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கண்காணித்து வருகிறார். ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு மந்தமாக நடப்பது போல தேர்தல் ஆணையம் வேண்டும் என்று வாக்குப்பதிவு எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதாக ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றம்சாட்டி உள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணிகள் வலுவுடன் இருக்கும் பகுதிகளில் எல்லாம் வேண்டுமென்றே மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மின்வெட்டு குறித்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. அது முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறானது என்று கூறி உள்ளது.






