என் மலர்tooltip icon

    இந்தியா

    எவ்வளவு வேண்டுமானாலும் அடிங்க... சாப்பாடு தாங்க... திருடனுக்கு புளியோதரை ஊட்டி விட்ட பொதுமக்கள்
    X

    எவ்வளவு வேண்டுமானாலும் அடிங்க... சாப்பாடு தாங்க... திருடனுக்கு புளியோதரை ஊட்டி விட்ட பொதுமக்கள்

    • திருடனை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.
    • சாப்பாடு தாருங்கள் என அலறினார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் எல்லா ரெட்டி கூடம் கிராமத்தில் நேற்று வாலிபர் ஒருவர் வீடுகள் மற்றும் அங்குள்ள ஒரு கோவிலை நோட்ட மிட்டபடி அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தார்.

    அதைப் பார்த்த அந்த ஊர் பொதுமக்கள் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாலிபர் திருட வந்துள்ளார் என்பதை ஊர்ஜிதம் செய்தனர். இதைத் தொடர்ந்து வாலிபரை பிடித்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்தனர். அவரை சிலர் அடித்து உதைத்தனர்.


    அப்போது வாலிபர் கதறி அழுதார். எவ்வளவு வேண்டுமானாலும் அடிங்கள். ஆனால் என்னால் பசி தாங்க முடியவில்லை. சாப்பாடு தாருங்கள் என அலறினார். இதை தொடர்ந்து பொதுமக்கள் தாக்குதலை நிறுத்தினர்.

    ஒரு வீட்டில் இருந்து புளியோதரை கொண்டு வந்தனர். கட்டி வைத்திருந்த திருடனை விடுவிக்காமல் அவர்களே ஊட்டி விட்டனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    விசாரணையில் அவர் அதே பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது 21) என்பதும், வீடுகளில் திருட வந்ததும் தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசை கைது செய்தனர்.

    திருட வந்த வாலிபரை கட்டி வைத்து உணவு ஊட்டி விட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×