search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு முத்தம் கொடுக்க முயற்சி- மற்றொரு டாக்டர் மீது வழக்குப்பதிவு
    X

    அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு முத்தம் கொடுக்க முயற்சி- மற்றொரு டாக்டர் மீது வழக்குப்பதிவு

    • தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
    • பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த பெண் டாக்டர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எர்ணாகுளம் மருத்துவமனையில் பணி புரிந்தபோது, பொது மருத்துவதுறையில் தலைவராக பணியாற்றிய டாக்டர் மனோஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் கொடுத்துள்ளார்.

    அறுவை சிகிச்சை செய்த போது மூத்த ஆலோசகர் ஒருவர் தன்னிடம் அத்துமீற முயன்றது குறித்து புகார் அளிக்க, மனோஜின் ஆலோசனை அறைக்கு சென்றபோது, அவர் தன்னை பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதாக அந்த பெண் மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி போலீசாருக்கு இ-மெயிலில் தனது புகார் மனுவை அனுப்பினார்.

    அதன்பேரில் மின்னஞ்சல் மூலமாக பெண் டாக்டரை தொடர்பு கொண்டு புகார் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனக்கு டாக்டர் மனோஜ், பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து போலீசாரிடம் பெண் டாக்டர் தெரிவித்திருக்கிறார்.

    தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் டாக்டர் மனோஜ் மீது 4 ஆண்டுகளாக புகார் கொடுக்காமல், தற்போது கொடுத்திருப்பதாகவும் அப்போது அவர் போலீசாரிடம் விளக்கமும் அளித்திருக்கிறார்.

    இந்நிலையில் பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தற்போது டாக்டர் மனோஜ், எர்ணாகுளத்தில் உள்ள மற்றொரு மருத்துவ மனையில் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×