என் மலர்
இந்தியா

எதிர்பாராமல் நிகழ்ந்த சாலைவிபத்து - அசாமில் வெடித்த வன்முறை... அணிவகுப்பில் ராணுவம்!
- கோக்ரஜார் மற்றும் அதனை ஒட்டியுள்ள சிரங் மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
- இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் தங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் நான்கு முதல் ஐந்து நிவாரண முகாம்களை அமைத்துள்ளது
அசாமில் இரு சமூகத்தினரிடையே அவ்வப்போது வன்முறைகள் வெடிப்பதுண்டு. அந்த வகையில் தற்போது வெடித்த வன்முறை ஒன்றில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக ராணுவத்தினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திங்கள்கிழமை இரவு அன்று கோக்ரஜார் நகரத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள கரிகான் என்னுமிடத்தில் போடோ சமூகத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஸ்கார்பியோ வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த இரு இளைஞர்கள்மீது வாகனம் மோதியுள்ளது. இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படுள்ளது.
இதனைத்தொடர்ந்து வாகனம் மோதிய இளைஞர்களின் சமூகமாக ஆதிவாசியினர் ஒன்றுதிரண்டு அந்த மூன்று இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதில் ஒரு இளைஞர் உயிரிழந்தார். தொடர்ந்து வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட மற்ற நான்கு இளைஞர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சையில் அனுமதிப்பட்டுள்ளனர். இதில் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த இரு உயிரிழப்புகளை தொடர்ந்து இரு சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். போராட்டக்காரர்கள் சிலர் வீடுகளுக்கும், ஒரு அலுவலகக் கட்டிடத்திற்கும், அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்த ஆதிவாசி கிளர்ச்சிக் குழுவின் ஒரு முகாமிற்கும் தீ வைத்தனர். மேலும் கரிகான் காவல் புறக்காவல் நிலையத்தையும் தாக்கினர்.
வன்முறை வெடிக்க போலீஸ், ராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இராணுவத்தின் நான்கு குழுக்களுடன் , விரைவு அதிரடிப்படை, மத்திய அரசுக் காவல் படை மற்றும் அசாம் மாநில காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவம் இன்று இரண்டாவது நாளாக அங்கு கொடி அணிவகுப்பை நடத்தியது.
இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் தங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் நான்கு முதல் ஐந்து நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற அச்ச உணர்வு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி.பி அகிலேஷ் குமார் சிங், நிவாரண முகாம்களில் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"நாங்கள் சில நம்பிக்கை தரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இன்று அனைவருடனும் ஒரு கூட்டத்தை நடத்துவோம்," என்று அவர் கூறினார். நிலைமை ஓரளவிற்கு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். வதந்திகளை பரப்புவோர் இத்தகைய செயல்களை நிறுத்தவில்லை என்றால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
நிலைமை சீராக கட்டுக்குள் வந்தாலும் நேற்றுமுதல் கோக்ரஜார் மாவட்டத்தில் BNSS பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளன. அதே சமயம், கோக்ரஜார் மற்றும் அதனை ஒட்டியுள்ள சிரங் மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.






