search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு: 5 எம்.எல்.ஏ.க்கள் மாயம் காரணமாக நிதிஷ்குமார் கட்சி அதிரடி முடிவு
    X

    நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு: 5 எம்.எல்.ஏ.க்கள் மாயம் காரணமாக நிதிஷ்குமார் கட்சி அதிரடி முடிவு

    • நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பாஜக 78, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
    • நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் நேற்று மதியம் நடந்த விருந்துக்கு வரவில்லை.

    பீகார் மாநிலத்தில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் மெகா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து அவர் ஆட்சி நடத்தி வந்தார். துணை முதல்-மந்திரியாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி இருந்தார்.

    இந்த நிலையில் சமீபத்தில் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் அமைந்திருந்த மெகா கூட்டணியை முறித்துக் கொண்டார். அங்கிருந்து விலகி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார்.

    மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நிதிஷ்குமார் சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பீகார் சட்டசபையில் நாளை (திங்கட்கிழமை) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.

    பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். தனித்து ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் 121 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

    நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 78 எம்.எல்.ஏ.க்கள், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 127 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. பெரும்பான்மை பலத்தை விட இந்த கூட்டணிக்கு கூடுதலாக 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

    எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 77 எம்.எல்.ஏ.க்கள், லெனின் கம்யூனிஸ்டுக்கு 12 எம்.எல்.ஏ.க்கள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல். ஏ.க்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் என 93 எம்.எல்.ஏ.க்கள் பலமே உள்ளது. இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆளும் கட்சி வரிசையில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியானது.

    இதையடுத்து பா.ஜனதா கட்சி தனது எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளது. அதுபோல நிதிஷ்குமாரும் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை கண்காணித்து வருகிறார். அவர்களும் தனி இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் நேற்று மதியம் நடந்த விருந்துக்கு வரவில்லை. அவர்கள் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் குதிரை பேரம் நடப்பதாக குற்றச் சாட்டுகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து ஓட்டெடுப்பின்போது அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும்.

    நிதிஷ் குமார் தொடர்பான விசயங்களுக்க ஆதரவு அளிக்க வேண்டும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி செயல்பட்டார் எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிடும் என கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஐந்து பேரில் இருவரும் நாங்கள் பீகார் மாநிலத்திற்கு வெளியில் இருப்பதாகவும், ஒருவர் உடல் நலக்குறைவால் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக தேஜஸ்வி கூறுகையில், "நாங்கள் விளையாட்டை இன்னும் தொடங்கவில்லை. ஆனால் விளையாட்டை நாங்கள்தான் முடித்து வைப்போம்" என்றார். இதனால் அவர் நாளைய நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் நிஜன்ராம் மாஞ்சியை இந்திய கம்யூனிஸ்டு தலைவர் ரகசியமாக சந்தித்து பேசினார். இதனால் நிதிஷ் குமாருக்கு பெரும்பான்மை பலம் கிடைக்குமா? என்பதில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனால் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் 4 எம்.எல்.ஏ.க்களும் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகதான் வாக்களிப்பார்கள் என்று மாஞ்சி உறுதி அளித்துள்ளார். என்றாலும் பீகார் அரசியலில் கடைசி நிமிட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நாளை காலை பீகார் சட்டசபையில் ஓட்டெடுப்பு நடக்கும்போது நிதிஷ்குமாருக்கு இருக்கும் பெரும்பான்மை பலம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்.

    Next Story
    ×