search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திரா ரெயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு, தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணி- ரெயில்கள் ரத்து
    X

    ஆந்திரா ரெயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு, தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணி- ரெயில்கள் ரத்து

    • தகவல் பெற ரெயில்வே துறை சார்பில் இலவச உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன
    • மனித தவறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக கிழக்கு ரெயில்வே செய்தி பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு விஜயநகரம் நோக்கி பாலசா பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. விஜயநகரம் மாவட்டம், கொத்தவலசா மண்டலம், கண்டகபள்ளி அலமண்டா இடையே ரெயில் வந்தபோது சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

    அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்ற பயணிகள் ரெயில் சிக்னலுக்காக நின்று கொண்டு இருந்த பாலசா ரெயிலின் பின்புறத்தில் பயங்கர வேகத்துடன் மோதியது.

    இந்த விபத்தில் பாலசா ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. ராயகடா நோக்கி சென்ற ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.

    கவிழ்ந்த ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் பலத்த காயமடைந்து கூச்சலிட்டனர். ரெயில் பெட்டிகளின் அவசரவழி வழியாக சில பயணிகள் வெளியே வந்தனர். அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்ததால் எதுவும் தெரியவில்லை.

    விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர. சம்பவ நடந்த இடம் முழுவதும் இருட்டாக இருந்தால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஜெனரேட்டர்கள் கொண்டு வரப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

    ரெயில் பெட்டிகளை வெட்டி எடுத்து அதிலிருந்த பயணிகள் மீட்கப்பட்டனர். நேற்று இரவு பயணிகள் 8 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இரவு முதல் விடிய விடிய ரெயில் பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது.

    காயமடைந்த 40 பயணிகள், விஜயநகரம் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 50 மருத்துவர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயம் அடைந்தவர்கள் திருமலை- மெடிகோவர் மருத்துவமனைகள் மற்றும் விஜயநகரத்தின் குயின்ஸ் என்ஆர்ஐ மருத்துவமனை உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இன்று காலையில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.

    ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு மேலும் ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார்.

    மேலும் ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை தொடர்பு கொண்டு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.

    ரெயில் விபத்து காரணமாக அந்த வழியாக இயக்கப்படும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 22 ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. தண்டவாளங்களில் கிடக்கும் ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி இன்று காலையில் தொடர்ந்து நடந்தது.

    விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் குறித்து தகவல் பெற ரெயில்வே துறை சார்பில் 8106053051, 8106053021, 8500041670, 8500041671, 0891 2746330, 0891 2744619, 8300383004 என்ற இலவச உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    மனித தவறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக கிழக்கு ரெயில்வே செய்தி பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து ரெயில்வே ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயில் விபத்தில் பயணிகள் பலியான சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×