என் மலர்
இந்தியா

கர்நாடகாவில் கடந்த 16 மாதங்களில் மட்டும் 981 விவசாயிகள் தற்கொலை..
- கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து விவசாயத் துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறினார்.
கர்நாடகாவில் கடந்த 16 மாதங்களில் மட்டும் 981 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 825 பேர் பயிர் விளைச்சல் தொடர்பான காரணங்களாலும், 138 பேர் பிற காரணங்களாலும் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலை செய்து கொண்ட 807 விவசாயிகளின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு ஏற்கனவே இழப்பீடு வழங்கியுள்ளது. இன்னும் 18 விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இங்கு மட்டும் 128 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கூடுதலாக, மைசூரில் 73, தார்வாட் மாவட்டத்தில் 72 மற்றும் பெலகாவியில் 71 பேர் இதே காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
"காங்கிரஸ் அரசின் புறக்கணிப்பு விவசாயிகளிடையே பீதியை உருவாக்கி வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து விவசாயத் துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா குற்றம் சாட்டினார்.
ஆனால் பாஜகவின் கூற்றுகளுக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், விவசாய பயிர்கள் அழிவதும், பூச்சிக்கொல்லிகள் பற்றாக்குறையும்தான் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம். விவசாய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார். அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று கூறினார்.






