என் மலர்
இந்தியா

மும்பையில் நடுவழியில் நின்ற மோனோ ரெயில் - அந்தரத்தில் சிக்கிய 582 பயணிகள் பத்திரமாக மீட்பு!
- மைசூர் காலனி ரெயில் நிலையம் வந்த மோனோ ரெயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதி வழியின் நின்றது.
- விபத்து குறித்து மோனோ ரெயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.
கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இதற்கிடையே, மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மைசூர் காலனி ரெயில் நிலையம் வந்த மோனோ ரெயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதி வழியின் நின்றது. இதனால் ரெயில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரெயிலில் சிக்கி இருந்தவர்களை நீள ஏணிகளின் மூலம் மீட்கும் பணிகள் நடந்தன. இந்நிலையில் சுமார் 4 மணி நேர போராட்டத்தின் பின் சிக்கியிருந்த 582 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விபத்து குறித்து மோனோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில், "வழக்கத்தைவிட ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் ரெயிலின் எடை 109 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இது ரெயிலின் இயல்பான எடை தாங்கும் திறனாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 104 மெட்ரிக் டன் அளவைவிட அதிகம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






