என் மலர்
இந்தியா

காதலியை பார்க்க சென்றவரை நிர்வாணமாக்கி தாக்குதல்- 4 பேர் அதிரடி கைது
- கும்பலின் தாக்குதலில் நிஷாத் படுகாயமடைந்தார்.
- இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் எடமன் பகுதியை சேர்ந்தவர் நிஷாத். இவர் தென்மலை அனூர் பகுதயை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். அவர் சம்பவத்தன்று இரவு தனது காதலியை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
அப்போது அவரை 5 பேர் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். பின்பு நிஷாத்தை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்த அவரை நிர்வாணமாக்கி அங்கிருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்தனர். அதன்பிறகும் நிஷாத்தை அவர்கள் 5 பேரும் சேர்ந்து ஆயுதங்களால் தாக்கியிருக்கின்றனர்.
மேலும் கத்தியால் வெட்ட முயன்றிருக்கின்றனர். கும்பலின் தாக்குதலால் வலி தாங்க முடியாமல் நிஷாத் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள், வீட்டை விட்டு வெளியே வந்தனர். இருந்தபோதிலும் அவர்கள் நிஷாத்தை தாக்கியபடி இருந்தனர்.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் அதனை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசார் வருவதையறிந்த நிஷாத்தை தாக்கியவர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
கும்பலின் தாக்குதலில் நிஷாத் படுகாயமடைந்தார். அவரை சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மீட்டு புனலூர் தாலுகா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை பற்றி நிஷாத் மற்றும் அந்த பகுதியை சேரந்த பொது மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது நிஷாத்தை தாக்கியது எடமன் பகுதியை சேர்ந்த சுஜித், சஜீவ், சிலின், அருண் உள்ளிட்ட 5 பேர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் சுஜித், சஜீவ், சிலின், அருண் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நிஷாத்தை நிர்வாணப்படுத்தி தாக்கியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். காதலியை பார்க்க வந்த வாலிபரை நிர்வாணப்படுத்தி மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






