search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கார்த்தி சிதம்பரம்
    X
    கார்த்தி சிதம்பரம்

    சீனர்களுக்கு முறைகேடாக விசா: கார்த்தி சிதம்பரம் 2-வது நாளாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜர்

    பொய் வழக்கு போட்டு பாராளுமன்றத்தில் தனது குரலை ஒடுக்க சி.பி.ஐ. முயற்சி செய்து வருகிறது என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    கடந்த 2011-ம் ஆண்டு 263 சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தர முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மேலும் சமீபத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    பின்னர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சி.பி.ஐ. கைது செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் சார்பில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் முன்ஜாமீன் வழங்க மறுத்த கோர்ட்டு, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் 16 மணி நேரத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதற்கிடையே நேற்று காலை கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ. தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசா முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    கார்த்தி சிதம்பரத்திடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இன்றும் நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.

    இதற்கிடையே விசா முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் பதிந்துள்ள வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அவரை கைது செய்ய 30-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானார். காலை டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்துக்கு அவர் நேரில் சென்றார்.

    கார்த்தி சிதம்பரத்திடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் முற்றிலும் சட்ட விரோதமான மற்றும் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு எந்த தொடர்பும் இல்லாத குற்றச்சாட்டில் சி.பி.ஐ. டெல்லியில் உள்ள எனது வீட்டில் சோதனை நடத்தியது.

    சோதனையின்போது சி.பி.ஐ. அதிகாரிகள் சிலர் நான் உறுப்பினராக உள்ள தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு தொடர்பாக மிகவும் ரகசியமான மறறும் முக்கியமாக எழுதி வைக்கப்பட்ட குறிப்புகள், ஆவணங்களை கைப்பற்றினர்.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எனது கடமைகளில் தலையிடும் சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைகள் பாராளுமன்றத்தால் நிறுவப்பட்ட ஜனநாயக கோட்பாடுகளின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

    இந்த விவகாரம் எனது பாராளுமன்ற சிறப்புரிமையை அப்பாட்டமாக மீறுவதாகும். சபை உறுப்பினரை இலக்கு வைத்து மிரட்டுவது சிறபுரிமையை மீறிவதாகும்.

    பொய் வழக்கு போட்டு பாராளுமன்றத்தில் எனது குரலை ஒடுக்க சி.பி.ஐ. முயற்சி செய்து வருகிறது. பாராளுமன்றத்தில் எனது செயல்பாடுகளை தடுக்க நினைக்கிறது.

    இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.

    Next Story
    ×