search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்- சி.பி.ஐ. விசாரணைக்கு தடை இல்லை

    தஞ்சை பள்ளி மாணவியின் தந்தை முருகானந்தம் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவுக்கு 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    புதுடெல்லி:

    அரியலூர் மாவட்டம் வடுக பாளையத்தை சேர்ந்தவர் லாவண்யா (வயது 17). இவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டு பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    விடுதி அறையில் தங்கி படித்த இவர் கடந்த மாதம் திடீரென வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார்.

    பள்ளி விடுதி அறையை சுத்தம் செய்யக்கூறி வார்டன் வற்புறுத்தியதால் லாவண்யா வி‌ஷம் குடித்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சர்ச்சை எழுந்தது.

    இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    போலீசாரிடம் மாணவி லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுதி வார்டன் சகாய மேரி கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் மதம் மாற கட்டாயப்படுத்தியதால் தான் லாவண்யா தற்கொலை செய்து கொண்டார் என கூறி பா.ஜனதா கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவி தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்கா கனுக் தலைமையிலான குழுவினர் லாவண்யா தற்கொலை தொடர்பாக விசாரித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா, மாவட்ட கல்வி அதிகாரி குழந்தைவேலு, கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா மற்றும் பிரேத பரிசோதனை செய்த டாக்டரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    லாவண்யா தற்கொலைக்கு என்ன காரணம்? எந்த முறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குமூலம் விவரம், பள்ளியில் ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா? என்பது குறித்து அவர்கள் விரிவான விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் மாணவியின் சொந்த ஊருக்கு சென்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கூறி மாணவியின் தந்தை முருகானந்தம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் முன்பு கடந்த 31-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை
    சி.பி.ஐ.
    க்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து தமிழக டி.ஜி.பி. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பெல்லா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (திங்கட்கிழமை) நடந்தது.

    அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறும்போது, ‘அரசு சார்பில் இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் சி.பி.ஐ. விசாரணை நடத்த தேவையில்லை. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு திசை திருப்பப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். அவர்கள் கூறுகையில், ‘இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டியது உள்ளது. எனவே மாணவியின் தந்தை முருகானந்தம் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவுக்கு 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக முருகானந்ததுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

    நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையை தற்போது நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அந்த விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு இப்போது குறுக்கிடுவது பொருத்தமாக இருக்காது.

    இதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க இயலாது. முதல்கட்டமாக சி.பி.ஐ. விசாரணை நடத்தட்டும். மற்ற விவரங்களை அடுத்த கட்டமாக விசாரிக்கலாம் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


    Next Story
    ×