என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானம்
    X
    விமானம்

    ஸ்ரீநகர்-சார்ஜா நேரடி விமானத்திற்கு பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த திடீர் தடை

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் எடுத்துச்சென்றுள்ளது.
    புதுடெல்லி:

    ஸ்ரீநகர்-சார்ஜா விமானம், தனது வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் திடீரென தடை விதித்துள்ளது. அந்த விமானம் வேறு பாதையில் செல்வதால், கூடுதலாக 1½ மணி நேரம் செலவாகிறது.

    காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஸ்ரீநகர்-சார்ஜா இடையே நேரடி விமான சேவை, கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கப்பட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதை தொடங்கி வைத்தார். ‘கோ பர்ஸ்ட்’ என்ற தனியார் விமான நிறுவனம், இந்த வழித்தடத்தில் விமானங்களை இயக்கி வருகிறது.

    கடந்த 23-ந்தேதி தொடங்கி, ஒரு வாரமாக பாகிஸ்தான் வான்வெளி வழியாக இந்த விமானங்கள் சென்று வந்தன.

    இந்தநிலையில், தனது வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் திடீரென தடை விதித்திருப்பதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இதனால், கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் மற்றும் ஓமன் நாடு வழியாக ஸ்ரீநகர்-சார்ஜா விமானங்கள் சென்று வருகின்றன. இது கூடுதல் தூரம் என்பதால், பயண நேரம் கூடுதலாக 1½ மணி நேரம் ஆகிறது.

    இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் எடுத்துச்சென்றுள்ளது. ஆனால், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றிடம் கேட்டபோது, பாகிஸ்தானிடம் இருந்து அதிகாரபூர்வ செய்தி எதுவும் வரவில்லை என்று தெரிவித்தன.

    ‘கோ பர்ஸ்ட்’ விமான நிறுவன செய்தித்தொடர்பாளரும் எதுவும் கூற மறுத்து விட்டார்.

    Next Story
    ×