search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    மகாராஷ்டிராவில் 6 மாதத்துக்கு முக கவசம் கட்டாயம்: உத்தவ் தாக்கரே

    குறைந்தது அடுத்த 6 மாதங்களுக்காவது பொது இடங்களில் முக கவசம் அணிவதை பொதுமக்கள் கண்டிப்பாக பழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
    மும்பை :

    நாட்டிலே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அக்டோபர் மாதத்தில் மாநிலத்தில் தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது மாநிலத்தில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 60 ஆயிரமாக குறைந்து உள்ளது.

    இதற்கிடையே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்று சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களிடம் பேசினார். அப்போது அவர் அடுத்த 6 மாதங்களுக்கு முக கவசம் கட்டாயம் என கூறினார்.

    இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    வல்லுநர்கள் இரவு நேர ஊரடங்கு அல்லது மற்றொரு ஊரடங்கை அமல்படுத்த ஆதரவாக உள்ளனர். ஆனால் அந்த நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து உள்ளது. ஆனால் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. வரும் முன் காப்பதே நலம். குறைந்தது அடுத்த 6 மாதங்களுக்காவது பொது இடங்களில் முக கவசம் அணிவதை பொதுமக்கள் கண்டிப்பாக பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

    பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் மற்றவர்களின் உயிருடன் விளையாடி கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. ஆனால் பள்ளிகளை திறப்பதில் பிரச்சினை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×