search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆறுமுகசாமி ஆணையம்
    X
    ஆறுமுகசாமி ஆணையம்

    ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது - சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை பதில்

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என அப்பல்லோ மருத்துவமனை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வந்தது.

    இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து 21 டாக்டர்கள் அடங்கிய நிபுணர் குழு மூலம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது

    இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தடை விதிக்க மறுத்து தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த ஆண்டு ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்த தடை உத்தரவை ரத்து செய்யவும், வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரியும் தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சஞ்சீவ் கன்னா அடங்கிய காணொலி அமர்வு முன் கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் இடைக்கால மனுவுக்கு பதில் அளிக்க அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் ஒருவார காலம் அவகாசம் கோரியதைத் தொடர்ந்து விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

    இந்நிலையில், தமிழக அரசின் இடைக்கால மனுவுக்கு அப்பல்லோ மருத்துவமனை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

    அந்த பதில் மனுவில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அதன் வரம்பை மீறுவதாக உள்ளது. அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறும் விசாரணையாக ஆணையத்தின் விசாரணை மாறியுள்ளது. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர் குழு மட்டுமே ஆராய முடியும். ஆணையத்தால் ஆராய முடியாது. ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை ஒருதலைப்பட்சமாகவும், தவறான எண்ணத்துடனும், முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×