search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி
    X
    இந்திய பிரதமர் நரேந்திர மோடி

    விவசாய விரோத சட்டங்களை இயற்றியதற்கு பாஜக அரசு மன்னிப்பு கேட்கவேண்டும் - சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி. பேச்சு

    பாராளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் மீறி விவசாய விரோத சட்டங்களை இயற்றியதற்கு பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என சஸ்பெண்ட் செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. கேகே ராகேஷ் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    வேளாண் சட்ட மசோதா நேற்று முன்தினம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியதற்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். 

    அமளியின் போது சபை விதிகளை மீறி நடந்து கொண்டதாக 8 எம்.பிக்களை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, இடைநீக்கம் செய்து  நடவடிக்கை எடுத்தார். 

    இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 8 பேரும் நேற்று முன் தினம் இரவு முதல் விடிய விடிய, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

    இதற்கிடையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் நேற்று பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தன. 

    மேலும், இந்த வெளிநடப்பு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி. சையது நாசீர் ஹூசைன் கூறுகையில், ’எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்துசெய்ய வேண்டும் என்று மட்டும் நாங்கள் கோரவில்லை. வேளாண் மசோதா மீது  மீண்டும் உரிய முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.

    ஆனால், அவைத்தலைவர் எதையும் கேட்பதாக தெரியவில்லை. எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டத்தொடரை புறக்கணித்துள்ளன. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். எனவே, அவர்களோடு சேர்ந்து நாங்களும் கூட்டத்தொடரை புறக்கணிக்கிறோம்’ என்றார்.

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தங்கள் தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டால் அவர்கள் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட சில மத்திய மந்திரி தெரிவித்திருந்தனர். 

    ஆனால், மன்னிப்பு கேட்க முடியாது என சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், தர்ணாவை கைவிட்டு கூட்டத்தொடரை புறக்கணித்த எதிர்க்கட்சிகளுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில், விவசாய விரோத சட்டத்தை இயற்றியதற்காக பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஒருவரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேகே ராகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து எம்.பி. கேகே ராகேஷ் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தின் அனைத்து ஒழுங்குமுறை மற்றும் விதிகளை மீறி விவசாய விரோத சட்டத்தை இயற்றிய பாஜக அரசுதான் மன்னிப்பு கேட்கவேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அல்ல. இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் நான் எனது போராட்டத்தை தொடருவேன்’ என்றார்.  
    Next Story
    ×