search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீதாராம் யெச்சூரி
    X
    சீதாராம் யெச்சூரி

    டெல்லி கலவர வழக்கு குற்றப்பத்திரிகையில் சீதாராம் யெச்சூரி பெயர் சேர்ப்புக்கு காங்கிரஸ் கண்டனம்

    டெல்லி கலவர வழக்கு குற்றப்பத்திரிகையில் சீதாராம் யெச்சூரி பெயர் சேர்க்கப்பட்டதற்கு ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி :

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை டெல்லியில் கலவரம் நடந்தது. இதில், 53 பேர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதுதொடர்பான வழக்கை விசாரிக்கும் டெல்லி போலீசார், துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

    அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

    டெல்லி கலவர வழக்கில், சீதாராம் யெச்சூரி மற்றும் அறிஞர்கள், செயற்பாட்டாளர்களை துணை குற்றப்பத்திரிகையில் சேர்த்ததன் மூலம், டெல்லி போலீசார், குற்றவியல் நீதிபரிபாலனத்தையே கேலிக்கூத்தாக்கி விட்டனர்.

    குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், யாராவது ஒருவரின் பெயரை சொன்னதற்காக, அவரை எப்படி குற்றப்பத்திரிகையில் சேர்க்க முடியும்? தகவலுக்கும், குற்றப்பத்திரிகைக்கும் இடையே விசாரணை, உறுதிப்படுத்துதல் ஆகியவை இருப்பதை டெல்லி போலீசார் மறந்து விட்டார்களா?

    இந்த வழக்கை டெல்லி போலீசார் பாரபட்சமாக கையாள்வதை முன்னாள் போலீஸ் அதிகாரி ஜூலியோ ரிபெய்ரோ கண்டித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதை டெல்லி போலீசார் காது கொடுத்து கேட்பார்களா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:-

    தங்கள் கொள்கைகளுக்கு எதிரான அதிருப்தி குரல்களை நசுக்கும் முயற்சியில் பா.ஜனதா இதுவரை இல்லாத அளவுக்கு கீழே இறங்கி இருக்கிறது.

    சீதாராம் யெச்சூரி போன்றவர்களின் குரல்களை அடக்க டெல்லி போலீசை தவறாக பயன்படுத்துவது வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதில், “மேற்கண்டவர்களை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கவில்லை. சில குற்றச்சாட்டுகள் காரணமாக அவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது” என்று கூறியுள்ளனர்.
    Next Story
    ×