search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பப்ஜி
    X
    பப்ஜி

    பப்ஜி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட செயலிகள் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து நீக்கம்

    பப்ஜி உள்பட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்த நிலையில், கூகுள் பிளேஸ்டோரில் இருந்து அவைகள் நீக்கப்பட்டுள்ளன.
    லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

    அதனைத் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே தடைவிதித்திருந்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை விதிக்கப்படும் எனவும், அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

    இதனிடையே சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் பப்ஜி எனப்படும் செல்போன் விளையாட்டு செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து கூகுளின் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். ஆகியவற்றில் இருந்து பப்ஜி உள்ளிட்ட செயலிகள் நீக்கப்பட்டன.
    Next Story
    ×