search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது சரியல்ல: உத்தவ் தாக்கரே

    தொழில் நடவடிக்கைகள் தொடங்கும் நிலையில், நிறுவனங்கள் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது சரியல்ல என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
    மும்பை

    கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தொழில் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் ஊதியத்தை குறைப்பது மற்றும் பணி நீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    இதுதொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கவலை தெரிவித்துள்ளார். மண்ணின் மைந்தர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு பெறுவதற்காக மாநில அரசு சார்பில் உருவாக்கப்பட்டு உள்ள ‘மகாஜாப்ஸ்' என்ற வலைதளத்தை நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்து பேசியதாவது:-

    மராட்டியத்தில் தொழிற்துறைகள் செயல்பட அரசு அனுமதி அளித்ததை அடுத்து, ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வர தொடங்கியுள்ளனர்.

    இன்று நமக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால் தொழிலாளர்கள் இல்லை. இதுதான் உண்மை நிலை. என்றாலும் நேற்று ஒரு விசித்திரமான காட்சியை நான் கண்டேன். பல தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை குறைக்க தொடங்கியுள்ளன. மேலும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்கின்றன.

    மண்ணின் மைந்தர்கள் மற்றும் ஊரடங்கின் போது சொந்த ஊர் திரும்பாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தனர். இது சரியல்ல. தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தீர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த பிரச்சினை குறித்து தொழில் அதிபர்களுடன் விவாதிக்கப்படும்

    மகாஜாப்ஸ் வலைதளம் காலத்தின் தேவை. இந்த அமைப்பு வெளிப்படையான முறையில் செயல்படும். மராட்டிய தொழில்துறை மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் அந்த ஆன்லைன் வலைதளத்தை பயன்படுத்தி வேலைக்கு விண்ணப்பிப்பவர்களில் எத்தனை பேர் உண்மையில் வேலை பெறுகிறார்கள் என்பதை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற மாநில தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய், “இந்த வலைதளம் மூலம் பொறியியல், லாஜிஸ்டிக், ஜவுளி உள்ளிட்ட 17 துறைகளில் பணி செய்ய விண்ணப்பிக்க முடியும்” என்றார்.
    Next Story
    ×