search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரன்தீப் சிங் சுர்ஜேவாலா
    X
    ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

    ஊரடங்கு முடிவு - மத்திய அரசின் திட்டம் பற்றி பிரதமர் விளக்க காங்கிரஸ் கோரிக்கை

    ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் பற்றி பிரதமர் மோடி விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்து உள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நேற்று காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற மே 3-ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் (ஹாட்ஸ்பாட்) அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்ள நாட்டு மக்கள் காத்து இருக்கிறார்கள். எனவே அதுபற்றி பிரதமர் மோடி விளக்க வேண்டும்.

    வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சினை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக என்ன நிதியுதவி திட்டங்கள் அரசிடம் உள்ளன? என்பதையும் தெரிவிக்க வேண்டும்.  இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறினார்.

    அத்துடன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளித்த பதிலில், கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 50 பேரின் பெயர்களை ரிசர்வ் வங்கி தெரிவித்து இருப்பதாக கூறிய ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அவர்களுடைய பெயர் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

    இந்த விஷயத்தில் மத்திய அரசு நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டதாகவும், அவர்களுடைய கடனை ரத்து செய்தது ஏன்? என்பதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

    கொரோனாவுக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் போராடி கொண்டிருக்கும் நிலையில், மாநிலங்களுக்கு கொடுக்க மத்திய அரசிடம் பணம் இல்லை. ஆனால் தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடனை ரத்து செய்து இருக்கிறது என்றும் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.
    Next Story
    ×