search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில்
    X
    மெட்ரோ ரெயில்

    ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன்மெட்ரோ ரெயில், விமான நிலையங்களில் புதிய நடைமுறை

    ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் புதிய நடைமுறைகளை பின்பற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தயாராகி வருகிறார்கள்.
    புதுடெல்லி:

    கொரோனா நோய்த்தொற்று காரணமாக மே மாதம் 3-ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    3-ந் தேதிக்கு பிறகு ரெயில் மற்றும் விமான போக்குவரத்து தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் புதிய, தரமான இயக்க நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் ஆலோசனை தெரிவித்து உள்ளனர்.

    கொரோனா பரவுவதற்கு முன்பு மெட்ரோ ரெயில் நிலையங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகளை இடைவெளியின்றி சோதனை செய்து வந்தனர். இனி புதிய நடைமுறைப்படி ஒவ்வொரு 3 பயணிகளை பரிசோதனை செய்துவிட்டு, கைகளை கிருமிநாசினி மூலம் துடைத்த பிறகே மீண்டும் பரிசோதனைக்கு செல்வார்கள்.

    இதேபோல தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ஸ்கேன் எந்திரங்கள் போன்றவையும் அடிக்கடி சுத்தம் செய்யப்படும்.

    ஒருவருக்கு ஒருவர் போதிய இடைவெளியை கடைபிடிப்பதற்காக மெட்ரோ ரெயில் பெட்டிகளில் பயணிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படும். மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ளே இருக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு அரங்குகளிலும் போதிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    விமான நிலையங்களுக்கு செல்வதற்கு முன்பாக தங்களது செல்போனில் ‘ஆரோக்கிய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தும்படி, மத்திய அரசை தொழில் பாதுகாப்பு படையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர். நாடு முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஏற்கனவே ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள்.

    மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களின் நுழைவாயிலில் நோய்த் தொற்று உள்ளவர்களை கண்டறிவதற்கு இந்த செயலி பேருதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

    விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனை நடைபெறும் பகுதியில் எந்தவிதமான திரவ பாட்டில்களும் அனுமதிக்கப்படாது என்பதால், அந்த சோதனை முடித்து உள்ளே செல்லும் பயணிகளுக்கு சிறிய அளவிலான கிருமிநாசினி திரவ பாட்டில்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பரிந்துரைத்து உள்ளனர்.

    இதுபோல மேலும் சில நடைமுறைகளையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வகுத்து உள்ளனர். இவை அனைத்தும் இறுதிவடிவம் பெற்றவுடன் மெட்ரோ நிர்வாகம் மற்றும் விமான துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஜி.பி.ராஜே‌‌ஷ் ரஞ்சன் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×