என் மலர்
செய்திகள்

காஷ்மீர் சட்டசபைக்கு மார்ச் மாதம் தேர்தல் - மத்திய அரசு முடிவு
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி- பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதல்-மந்திரியாக மெகபூபா முப்தி இருந்து வந்தார்.
2018 ஜூன் மாதம் பாரதிய ஜனதா தனது ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து மெகபூபா ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு 6 மாதம் கவர்னர் ஆட்சி நடந்தது. இப்போது ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் காஷ்மீருக்கு மத்திய அரசு அரசியல் சட்டம் 370, 35-ன் படி வழங்கி இருந்த சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெற்றது. மேலும் அந்த மாநிலம் காஷ்மீர்- லடாக் என 2 யூனியன் பிரதேச மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.
மத்திய அரசின் இந்த முடிவால் காஷ்மீரில் கலவரம் வெடிக்கலாம் என கருதி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக இயல்பு நிலைமை மோசமாக உள்ளது.
விரைவில் அங்கு அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
ஏற்கனவே உள்ள காஷ்மீர் மாநில சட்டசபையில் மொத்தம் 111 தொகுதிகள் இருந்தன. அதில், 24 தொகுதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்காக ஒதுக்கப்பட்டவை. அந்த பகுதி பாகிஸ்தான் வசம் இருப்பதால் தேர்தல் நடப்பது இல்லை.
எனவே, 87 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.
ஏற்கனவே உள்ள 111 தொகுதிகளில் 4 தொகுதிகள் லடாக் பகுதியில் உள்ளன. அந்த பகுதி சட்டசபை இல்லாத தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் அந்த 4 தொகுதிகளும் இல்லாமல் போய் விடுகிறது.
இப்போது காஷ்மீர் மாநிலம் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் 7 தொகுதிகள் கூடுதல் ஆக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது காஷ்மீரின் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 114. அதில், 24 தொகுதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கின்றன.
எனவே, 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டும். அங்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
முன்னதாக காஷ்மீரில் புதிதாக தொகுதிகள் பிரிக்கப்பட்டு வரையறை செய்யப்பட இருக்கின்றன. 2011-ம் ஆண்டு மொத்த மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் சம அளவு வாக்குகள் இருக்கும் வகையில் தொகுதி பிரிக்கப்படும்.
தற்போது காஷ்மீரில் அமைதியற்ற நிலை நிலவி வருவதால் நிலைமை சீரான பிறகுதான் தொகுதி பிரிப்பு பணிகளை தொடங்க முடியும்.
1947-48-ல் நாடு பிரிவினை ஏற்பட்டபோது ஜம்மு பகுதியில் வெளியில் இருந்து வந்த ஏராளமான மக்கள் குடியமர்ந்தார்கள். அவ்வாறு 8 லட்சம் பேர் வரை இருக்கிறார்கள்.
ஆனால், அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவில்லை. காஷ்மீருக்கு தனிச்சட்டம் இருந்ததால் ஓட்டுரிமை பெற முடியாத நிலை இருந்தது. ஆனால், இப்போது புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும்.
தொகுதி வரையறை தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.
அங்கு வரையறை பணிகளை செய்வதற்கு சாதகமான சூழ்நிலை இருப்பதாக மத்திய உள்துறை தெரிவித்ததும் தொகுதி வரையறை பணிகளை தொடங்குவார்கள்.
தொகுதி வரையறைக்கு தனி கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் இந்த பணிகளை மேற் கொள்வார்கள். அதில் உறுப்பினராக உள்ள முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி இதுபற்றி கூறியதாவது:-
தொகுதி வரையறை சட்ட விதிகளின் அடிப்படையில் அங்கு தொகுதி பிரிப்பு பணிகள் நடைபெறும். உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து முதலில் தொகுதி எல்லைகள் வரையறை செய்யப்படும்.
அதன் பிறகு மக்கள் தொகை சமமாக இருக்கும் வகையில் அவை பிரிக்கப்படும். ஏற்கனவே உள்ள தொகுதி எண்ணிக்கையில் இப்போது 7 தொகுதிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதற்கு தகுந்த மாதிரி மாற்றி அமைக்க வேண்டி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொகுதி வரையறை பணிகள் முடிந்து தேர்தல் நடத்துவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவானதும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
தொகுதி வரையறை பணிகள் முடிவதற்கே சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
காஷ்மீர் மாநிலத்தில் ஏற்கனவே 6 எம்.பி. தொகுதிகள் இருந்தன. கடந்த தேர்தலில் 3 இடங்களில் பாரதிய ஜனதாவும், 3 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சியும் வெற்றி பெற்றன.
தற்போது ஒரு தொகுதி லடாக் பகுதிக்கு சென்று விட்டதால் காஷ்மீரில் மொத்தம் 5 எம்.பி. தொகுதிகள் உள்ளன.