search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாரா? வலைதளங்களில் பரவும் வதந்தி
    X

    ராகுல் காந்தி எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாரா? வலைதளங்களில் பரவும் வதந்தி

    2019 இந்திய பொது தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி சுமார் எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தகவல் பரவி வருகிறது.



    இந்தியாவில் நடந்து முடிந்த 2019 பொது தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி 8,54,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    இதே தகவலை ஃபேஸ்புக்கில் பலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். ரமேஷ் ஷர்மா சங்கேனர் என்ற பெயர் கொண்ட நபர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி வயநாட்டில் 8,54,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும், இதன் மூலம் 2019 பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக ராகுல் காந்தி இருக்கிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.



    ஐ.டி. & சோஷியல் மீடியா செல் காங்கிரஸ் எனும் ஃபேஸ்புக் பக்கம் இதே பதிவினை பகிர்ந்து இருக்கிறது. எனினும், இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் கிடையாது.

    உண்மையில் ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாட்டில் அவர் மொத்தம் 7,06,367 வாக்குகளையே பெற்றார். வயநாட்டில் இரண்டாவது இடம் பிடித்த வேட்பாளர் மொத்தம் 2,74,597 வாக்குகளை பெற்றிருக்கிறார். இதன்மூலம் ராகுல் காந்தி 4,37,770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.



    இதுதவிர 2019 பொது தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராகுல் காந்தி கிடையாது. 2019 பொது தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் பா.ஜ.க. கட்சியின் வேட்பாளர்களே இருக்கின்றனர். 



    இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தின் படி பா.ஜ.க.-வின் சி.ஆர். பாட்டீல் சுமார் 6.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரை தொடர்ந்து ஹரியானாவின் கர்னல் தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய் பாட்டியா 6.56 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஹரியானாவின் ஃபாரிதாபாத் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணன் பால் 6.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

    ராகுல் காந்தி சுமார் எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக ஃபேஸ்புக்கில் பரவும் தகவல்கள் உண்மையில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
    Next Story
    ×