என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணீர் மல்க எனக்கு விடைகொடுத்தார் அத்வானி - சத்ருகன் சின்கா புதிய தகவல்
    X

    கண்ணீர் மல்க எனக்கு விடைகொடுத்தார் அத்வானி - சத்ருகன் சின்கா புதிய தகவல்

    பா.ஜனதாவில் இருந்து விலகியபோது அத்வானி கண்ணீர் மல்க எனக்கு விடை கொடுத்தார் என்று சத்ருகன்சின்கா கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    சத்ருகன் சின்கா சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார்.

    காங்கிரஸ் சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதாவில் நான் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன். வாஜ்பாயின் பேச்சைக்கேட்டு மனதை பறிகொடுத்து பா.ஜனதாவில் சேர்ந்தேன். அப்போது கட்சியில் ஜனநாயகம் இருந்தது.

    இப்போது தனிநபர் ஆதிக்கம் வந்துவிட்டது. எனவேதான் பா.ஜனதாவில் இருந்து விலக முடிவு செய்தேன். இதற்காக அத்வானியை சந்தித்து ஆசி பெற்றேன்.



    அப்போது அவர் எனக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தார்.

    பா.ஜனதாவில் இருந்து விலக வேண்டாம் என்று அவர் என்னை தடுக்கவில்லை. அதற்கு பதில் அவர் எனது அன்பு என்றென்றும் உண்டு என்று ஆசீர்வதித்தார்.

    இப்போது நான் சரியான திசைக்கு வந்துள்ளேன். அந்த திசை நல்ல திசையாகவும் உள்ளது.

    அத்வானியை அவர்கள் மிகவும் அவமரியாதை செய்கிறார்கள். அதை தட்டிக்கேட்டதால் என்னை பணிய வைக்க முயற்சி செய்தனர். ஆனால் நான் பணியவில்லை.

    எனவே கடந்த 2 ஆண்டுகளாக எனது தொகுதிக்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. மோடி மிதமிஞ்சிய நம்பிக்கையில் இருக்கிறார்.

    பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்கள் என்று நம்புகிறார். 23-ந்தேதி அவருக்கு உண்மை தெரிந்து விடும்.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எனது நண்பர்களில் ஒருவர் ஆவார். அவர் இரும்புப் பெண்மணி. அவர் சரியான முடிவு எடுப்பார் என நம்புகிறேன்.

    இவ்வாறு சத்ருகன் சின்கா கூறினார்.
    Next Story
    ×