என் மலர்
செய்திகள்

ராகுலை 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி தோற்கடிப்பார் - அமித் ஷா
லக்னோ:
ராகுல்காந்தி போட்டியிடும் உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அவரை எதிர்த்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.
அந்த தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ரோடு ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அமேதி தொகுதி நிலவரம் குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த தொகுதி இந்திராகாந்தி குடும்பத்திடம் உள்ளது. ஆனாலும் இங்கு எந்த முன்னேற்றமும் நடக்க வில்லை. கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை.
மோடி 2014-ல் ஆட்சிக்கு வந்தபிறகு தான் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் கியாஸ் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த தொகுதியை பொறுத்தவரையில் வாரிசு அரசியலுக்கும், வளர்ச்சிக்கும் மத்தியில் போட்டி நடக்கிறது. இதில் வளர்ச்சி தான் வெற்றி பெறும் என்பது நிதர்சனமாக தெரிகிறது.

கடந்த தேர்தலில் ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி நெருக்கடி கொடுத்ததால் ஒரு லட்சத்து 7 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மட்டுமே ராகுலால் வெற்றி பெற முடிந்தது.
ஆனால் இந்த தடவை நிலைமை மாறுகிறது. ஒரு லட்சம் ஓட்டுகள் அதிகமாக பெற்று ஸ்மிருதி இரானி வெற்றி பெறுவது உறுதி.
எங்களை எதிர்த்து போராடும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சியிலும் வாரிசு அரசியல் தான் நடக்கிறது. சமாஜ்வாடி கட்சியில் மட்டும் ஒரே குடும்பத்தில் 5 பேர் போட்டியிடுகிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சியிலும் தங்களது உறவினர்களுக்கு தான் டிக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த தேர்தலில் மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முடிவை உத்தரபிரதேசம் எடுத்தது. கடந்த தேர்தலில் இங்கு மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடங்களில் வெற்றி பெற்றோம். இந்த தடவை அதைவிட அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களால் மக்கள் பெரிய அளவில் பலன் அடைந்துள்ளனர். பிரதமரின் அவாஸ் யோஜனா, உஜ்வாலா, உஜாலா போன்ற திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளன. இது எங்களுக்கு தேர்தல் வெற்றியை கொடுக்கும். மே 23-ந்தேதி நல்ல முடிவை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அமித்ஷா கூறினார். #SmritiIran #AmitShah






