search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோழிக்கோட்டில் இன்று மாலை பிரதமர் மோடி பிரசாரம்
    X

    கோழிக்கோட்டில் இன்று மாலை பிரதமர் மோடி பிரசாரம்

    பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி கோழிக்கோட்டில் இன்று மாலை பிரசாரம் செய்கிறார். பிரதமர் வருகையையொட்டி கோழிக்கோட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PMModi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, பா.ஜனதா கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. ஆளும் கட்சி என்பதால் கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது.

    காங்கிரஸ் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் இந்த தேர்தலில் கடந்த முறையைவிட அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவதால் அது தங்களது வெற்றிவாய்ப்பை அதிகரித்து உள்ளதாக காங்கிரசார் நம்புகிறார்கள்.

    இவர்களுக்கு அடுத்த இடத்தில் பா.ஜனதா கட்சி உள்ளது. கேரளாவில் இருந்து இதுவரை பா.ஜனதா சார்பில் ஒரு எம்.பி. கூட பாராளுமன்றத்திற்கு தேர்தெடுக்கப்படவில்லை. எனவே இந்த தேர்தலில் தங்களது வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என்பதில் பா.ஜனதா மிகவும் உறுதியுடன் உள்ளது.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 6.10 மணிக்கு கோழிக்கோடு வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கிறார்கள்.

    அங்கிருந்து கார் மூலம் கோழிக்கோடு கடற்படை மைதானத்திற்கு செல்லும் மோடி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். கோழிக்கோடு, வடகரை, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார். பிரதமர் மோடி கேரளா வருகையையொட்டி கோழிக்கோட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை செல்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக மீண்டும் வருகிற 18-ந்தேதி கேரளா வருகிறார். அன்று திருவனந்தபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #PMModi

    Next Story
    ×