search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும்- நடிகை குஷ்புவுக்கு பாராட்டு குவிகிறது
    X

    பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும்- நடிகை குஷ்புவுக்கு பாராட்டு குவிகிறது

    சில்மிஷம் செய்தவருக்கு பளார் என்று ஒரு அறை விட்ட நடிகை குஷ்புவின் செயலுக்கு, பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும் என்று பலர் பாராட்டுகின்றனர். #Kushboo
    பெங்களூர்:

    பெங்களூர் மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரிஸ்வான் அர்சத் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார்.

    முன்னதாக நடிகை குஷ்பு பெங்களூர் இந்திராநகரில் உள்ள ரிஸ்வான்அர்சத் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கிருந்து அவர் பிரசாரம் செய்வதற்கு புறப்பட்டார்.

    அவரை காண வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி தனது பிரசார வாகனத்தில் ஏறுவதற்காக குஷ்பு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது குஷ்புவுக்கு பின்னால் வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் முறைகேடாக நடக்க முயற்சி செய்தார். அவரது சில்மிஷத்தை உணர்ந்த மறுநிமிடமே குஷ்புவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. வேகமாக திரும்பிய அவர் அந்த வாலிபர் கன்னத்தில் “பளார்” என்று ஒரு அறை விட்டார்.

    திடீரென குஷ்பு கூட்டத்துக்குள் ஒருவரை அடித்ததை கண்டதும் அங்கிருந்தவர்கள் பரபரப்பு அடைந்தனர். குஷ்புவுடன் வந்துக் கொண்டிருந்த ரிஸ்வான் அர்சத், சாந்தி நகர் எம்.எல்.ஏ. அகமதுகரீஸ் ஆகியோர் என்ன நடந்தது என்று விசாரித்தனர்.



    அவர்களிடம் குஷ்பு நடந்ததை கூறினார். அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை அந்த கூட்டத்தில் இருந்து விலக்கி தனியாக அழைத்து சென்றனர்.

    அந்த வாலிபருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குஷ்பு தரப்பில் இருந்து யாரும் புகார் கொடுக்காததால் போலீசார் விடுவித்து விட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குஷ்புவுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு குஷ்பு பிரசாரத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    இதற்கிடையே கூட்டத்துக்குள் வாலிபரை குஷ்பு பளார் என அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆயிரக்கணக்கானவர்கள் அந்த வீடியோ காட்சிகளை பார்த்தனர்.

    இதைத் தொடர்ந்து குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தில் ஏராளமானவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். குஷ்புவின் அதிரடி செயலை பாராட்டியும் விமர்சனம் செய்தும் ஏராளனமான பதிவுகள் இடப்பட்டு இருந்தது.

    பெரும்பாலும் குஷ்புவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து ஏராளமானவர்கள் பதிவு செய்திருந்தனர். பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும். பொது இடங்களில் பயப்படக்கூடாது என்ற ரீதியில் பெரும்பாலானவர்களின் கருத்து அமைந்து இருந்தது.

    சரவணன் சுப்பிரமணியன் என்பவர், “குஷ்பு உங்களின் செயல் உங்களது வலிமையையும், துணிச்சலையும் காட்டுகிறது. பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்களுக்கு எப்படி உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நல்ல பாடத்தை நீங்கள் அனைத்து பெண்களுக்கும் சொல்லி இருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.

    அதே சமயத்தில் சிலர் குஷ்புவை கிண்டல் செய்தும் டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். பா.ஜனதாவைச் சேர்ந்த அபிஷேக் சர்மா என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், “குஷ்பு அந்த சூழ்நிலையை சமாளித்த விதம் அருமை. ஆனால் காங்கிரஸ் கூட்டங்களில்தான் இப்படியெல்லாம் நடக்கிறது” என்று கூறியுள்ளார்.

    மற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில், “குஷ்புவிடம் சில்மி‌ஷம் செய்தவர் காங்கிரஸ் தொண்டராக இருந்தால் என்ன செய்து இருப்பார்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    அதற்கு பதில் அளித்துள்ள குஷ்பு, “என்னிடம் அறை வாங்கியவர் காங்கிரஸ் தொண்டர் என்று நான் குறிப்பிட்டு இருக்கிறேனா? சரி பரவாயில்லை. அவர் காங்கிரஸ் தொண்டராகவே இருந்தாலும் எனது நடவடிக்கை ஒரே மாதிரிதான் இருந்திருக்கும்” என்று கூறியுள்ளார். #Kushboo
    Next Story
    ×