என் மலர்tooltip icon

    செய்திகள்

    வயநாடு தொகுதியில் மீண்டும் பிரதமர் மோடி, அமித்ஷா பிரசாரம்
    X

    வயநாடு தொகுதியில் மீண்டும் பிரதமர் மோடி, அமித்ஷா பிரசாரம்

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதால், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளனர். #LokSabhaElections2019 #PMModi #AmitShah
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்.

    வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் கேரள தேர்தல் களம் தலைகீழானது. வயநாட்டில் போட்டியிடுவதாக இருந்த எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அவசர அவசரமாக மாற்றப்பட்டனர்.

    ராகுலுக்கு எதிராக யாரை களம் இறக்கலாம் என்று ஆலோசனைகள் நடந்தது. பா.ஜனதா கட்சி ஏற்கனவே அறிவித்த வேட்பாளருக்கு பதில், துஷார் வெள்ளாப்பள்ளியை களம் இறக்கப்போவதாக அறிவித்தது. கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை மாற்றுவதற்கு பதில் அங்கு முக்கிய தலைவர்களை அனுப்பி பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்தது.

    வயநாடு தொகுதிக்கு தேசிய அரங்கில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் ஏற்பட்டது. இந்த தொகுதியை கைப்பற்றி விட எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகிறது. குறிப்பாக பா.ஜனதா கட்சி இந்த தொகுதியில் வெற்றி பெற அதிக முனைப்பு காட்டுகிறது.

    கேரளாவில் பிரதமர் மோடி ஏற்கனவே 3 முறை வந்து சென்று விட்டார். கோழிக்கோட்டிலும் பா.ஜனதா பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இப்போது வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிட உள்ளதால் அவர், மீண்டும் கேரளா வர உள்ளதாக பா.ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இதுபோல பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும் வயநாடு தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.



    வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதால் அங்கு சர்வதேச மற்றும்தேசிய ஊடகங்கள் குவிந்துள்ளன. ராகுல்காந்தியின் பிரசாரத்தை படம் எடுக்கவும், தொகுதி நிலவரத்தை பதிவு செய்யவும், வயநாடு வாக்காளர்களின் கருத்தை நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஊடகங்கள் வயநாட்டில் முகாமிட்டுள்ளன.

    அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் அங்கு குவிந்துள்ளனர். தொகுதி எங்கும் தேசிய கட்சிகளின் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு தொகுதியே களை கட்டி உள்ளது.  #LokSabhaElections2019 #PMModi #AmitShah

    Next Story
    ×