என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிடிபட்ட சிறுத்தைப்புலியை வனத்துறையினர் கூண்டில் ஏற்றியபோது எடுத்த படம்.
    X
    பிடிபட்ட சிறுத்தைப்புலியை வனத்துறையினர் கூண்டில் ஏற்றியபோது எடுத்த படம்.

    மும்பை குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் பிடித்தனர்

    மும்பை மரோல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய சிறுத்தைப்புலியை வனத்துறையினர் பிடித்தனர். #LeopardatResident
    மும்பை:

    மும்பை அந்தேரி, மரோல் விஜய் நகர் பகுதியில் உட்லேண்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 8 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பு கட்டிடம் ஆரேகாலனி எல்லை சுவரில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் விஜய் நகர் பகுதிக்குள் சிறுத்தைப்புலி புகுந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் உட்லேண்ட் கட்டிடத்தில் 5-வது மாடியில் வசித்து வரும் பிரமோத் என்பவர் தரை தளத்தில் நிறுத்தியிருந்த தனது காரை எடுக்கச்சென்றார். அப்போது காருக்கு அடியில் சிறுத்தைப்புலி ஒன்று படுத்து இருப்பதை பார்த்து தப்பித்தோம், பிழைத்தோம் என வீட்டுக்கு தலைத்தெறிக்க ஓடினார்.

    இந்தநிலையில் தகவல் அறிந்து வனத்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் முதலில் குடியிருப்புவாசிகளை கதவை பூட்டிவிட்டு வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரித்தனர். பின்னர் கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்து சிறுத்தைப்புலி தப்பிவிடாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வனத்துறையினர் சிறுத்தைப்புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் சிறுத்தைப்புலியை வேன் மூலம் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

    மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சிறுத்தைப்புலி காட்டில் கொண்டு விடப்படும் என வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் சிறுத்தைப்புலி நுழைந்த சம்பவத்தால் நேற்று மரோல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #LeopardatResident
    Next Story
    ×