என் மலர்
செய்திகள்

பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #PonManickavel #SupremeCourt
புதுடெல்லி:
சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்தும், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதேபோல் பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 66 போலீசார் சார்பில் நேற்று முறையீட்டு மனு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. யானை ராஜேந்திரன், டிராஃபிக் ராமசாமி ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.
விசாரணையின்போது, பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பொன் மாணிக்கவேல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், எந்த தகவலையும் தமிழக அரசுக்கு தெரிவிப்பது இல்லை என்றும் கூறப்பட்டது.
பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நீதிமன்றம் நியமித்தது அதிகார வரம்பு மீறல் என்றும், தமிழக அரசின் உரிமையை பறிக்கும் வகையில் உயர் நீதிமன்றம் செயல்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு வாதிட்டது. இதேபோல் எதிர்மனுதாரர்களிடமும் இவ்வழக்கின் நிலை குறித்து விளக்கம் பெறப்பட்டது.
இடையில் நீதிபதிகள், தமிழக அரசின் செயல்பாடு குறித்து தங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் எழுப்பினர். பொன் மாணிக்கவேலின் விசாரணை வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
“இந்த வழக்கைப் பொருத்தவரை அதிகாரி பொன் மாணிக்கவேல் நல்லவரா? கெட்டவரா என்பதை பார்க்கப் போவதில்லை. அவரது நியமனம் சரியா, தவறா? என்பதை மட்டுமே பார்க்கப்போகிறோம்” என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் இன்றுடன் நிறைவடைந்தன. வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். #PonManickavel #SupremeCourt
Next Story






