search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தலைமையை  அழித்துவிட்டோம்- ராணுவம் தகவல்
    X

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தலைமையை அழித்துவிட்டோம்- ராணுவம் தகவல்

    காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையை முற்றிலும் அழித்துவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. #PulwamaAttack #KJSDillon
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டம் போர்க்களம் போல் மாறி உள்ளது. அந்த மாவட்டத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர்.

    இதனையடுத்து நேற்று அப்பகுதியில் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.  இதில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி கம்ரான் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.



    இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு முக்கிய காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பினரை காஷ்மீரில் இருந்து ஒழித்துவிட்டதாக ராணுவ அதிகாரி கான்வல் ஜீத் சிங் தில்லோன் இன்று தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கான்வல் ஜீத் சிங் தில்லோன் மேலும் கூறியதாவது:-

    ஜெய்ஷ் இ முகமது தலைமையகத்தை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த இந்த அமைப்பினைச் சேர்ந்த அனைவரையும் கண்டறிந்து, ஒழித்து விட்டோம். இந்த நடவடிக்கை புல்வாமாவில் நடந்த தாக்குதலில் இருந்து 100 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு இதில் தொடர்பு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

    பாகிஸ்தான் ராணுவத்தின் குழந்தையாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பு செயல்படுகிறது. பயங்கரவாதிகளை ஒழிப்பதையே எங்கள் இலக்காக கொண்டுள்ளோம். காஷ்மீரின் எல்லைக்குள் பயங்கரவாதிகள் நுழைந்தால் நிச்சயம் திரும்பிச் செல்லமாட்டார்கள். காஷ்மீரில் இருக்கும் தாய்மார்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். உங்கள் மகன், ஆயுதம் ஏந்தியிருந்தால், அதை உடனடியாக துறக்கச் சொல்லுங்கள். இங்கு இருக்கும் கடைசி பயங்கரவாதியை கொல்லும் வரை ஓயமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #KJSDillon

    Next Story
    ×