search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்
    X

    காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்

    துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடந்த தற்கொலை தாக்குதலில் சமீப காலங்களில் நடந்த மோசமான, மிகப்பெரிய தாக்குதல் ஆகும். #JammuKashmir #CRPF #PulwamaAttack
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர்.

    அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளதாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் அணி வகுத்து செல்ல பாதுகாப்புக்கு கவச வாகனங்களும் உடன் சென்றன.

    ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் சென்றபோது பயங்கரவாதி ஒருவன் வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரை வேகமாக ஓட்டி வந்து ராணுவ வீரர்கள் வந்த ஒரு பஸ் மீது மோதினான்.

    இதில் வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்தது. பஸ்சில் இருந்த 76-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அனைவரும் உடல் சிதறி விழுந்தனர். அருகில் வந்த மற்ற வாகனங்களும் சேதமடைந்தன.

    இந்த தற்கொலை தாக்குதலில் 44 துணைநிலை ராணுவ வீரர்கள் பலியானார்கள். அவர்களது உடல்கள் சாலையில் சிதறி கிடந்தன. படுகாயம் அடைந்து கிடந்த வீரர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.



    இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.

    தற்கொலை தாக்குதல் நடத்தியது அதில் அகமது என்பதும் புல்வாமா மாவட்டம் காக்கபோரா பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. இவன் கடந்த ஆண்டுதான் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளான்.

    இந்த தாக்குதலையடுத்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஜம்மு-காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்கை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    மேலும் மாநில தலைமை செயலாளர் ராஜீவ்கூபா, பாதுகாப்பு பிரிவு இயக்குனர் பத்நகர் ஆகியோரையும் தொடர்பு கொண்டு பேசினார். ராஜ்நாத்சிங் இன்று மேற்கு வங்காள சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு காஷ்மீர் செல்கிறார்.

    துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடந்த தற்கொலை தாக்குதலில் சமீப காலங்களில் நடந்த மோசமான, மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.

    கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி காஷ்மீரில் உரி ராணுவ தளத்தில் நடந்த தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலையும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புதான் நடத்தியது.

    2016-ம் ஆண்டு ஜூன் 3-ந்தேதி பாலமோர் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    அதே ஆண்டு ஜனவரி மாதம் பதான்கோர்ட்டு ராணுவ தளத்தில் 6 பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 ராணுவ வீரர்கள், ஒரு அதிகாரி உயிரிழந்தனர்.

    கடந்த 2002-ம் ஆண்டு மே 14-ந்தேதி ஜம்முவில் உள்ள காலுசாக் ராணுவ பாசறையில் 3 பயங்கரவாதிகள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 36 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதுவரை நடந்துள்ள தாக்குதல்களில் தற்போது நடந்த தற்கொலை தாக்குதல் மிக மோசமானதாக கருதப்படுகிறது.

    ஒரே நாளில் 44 இந்திய ராணுவ வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    காஷ்மீர் தற்கொலை தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. #JammuKashmir #CRPF #PulwamaAttack
    Next Story
    ×