search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரதீய ஜனதா தலைவர்கள் உடல்நலக்குறைவால் அவதி
    X

    பாரதீய ஜனதா தலைவர்கள் உடல்நலக்குறைவால் அவதி

    பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களான தேசிய தலைவர் அமித்‌ஷா, நிதி மந்திரி அருண்ஜெட்லி, சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் திடீர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். #BJP
    புதுடெல்லி :

    நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலை சந்திக்க பாரதீய ஜனதா கட்சி தலைமை முனைப்பு காட்டி வருகிறது. தேர்தலுக்கும் இன்னும் 100 நாட்களே இருக்கும் நிலையில் தற்போது பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது கட்சியினருக்கு கவலையை அளித்து உள்ளது.

    கோவா முதல்-மந்திரியும் பாரதீய ஜனதா மூத்த தலைவருமான மனோகர் பாரிக்கர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் கோவாவில் நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதாக புகார் கூறி வருகிறார்கள்.

    இதற்கிடையே சிறுநீரக நோயால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்த மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்று உள்ளார்.

    நாடாளுமன்றத்தில் அவர் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று இருப்பது ஆட்சியினருக்கும் கட்சியினருக்கும் இடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் எப்போது இந்தியா திரும்புவார் என்பது தெரியாத நிலை உள்ளது.

    பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்‌ஷா நாடாளுமன்ற தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். மாநிலம் மாநிலமாக சென்று அவர் தேர்தலை எதிர்கொள்ள கட்சியினரை சந்தித்து வருகிறார்.



    இந்த நிலையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது நலமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நுரையீரல் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நேற்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில்‘ தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் குழு மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர்(அமைப்பு) ராம்லால் காய்ச்சல் காரணமாக நொய்டாவில் உள்ள கைலா‌ஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தகவல் தொடர்பு உறுப்பினர் கெச்சாண்டு சர்மா வழக்கமான உடல் பரிசோதனைக்காக கைலா‌ஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில்‘ வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்து உள்ளேன். யாரும் கவலைப்படதேவையில்லை. விரைவில் நான் வீடு திரும்புவேன்‘ என பதிவிட்டுள்ளார்.

    டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தேசிய தலைவர் அமித்‌ஷா உள்ளிட்ட தலைவர்களை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று(வெள்ளிக்கிழமை) பார்வையிடுவார் என தெரிகிறது. #BJP
    Next Story
    ×