search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் - பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகை
    X

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் - பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகை

    பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ஜனவரி மாதம் இறுதியில் தமிழ்நாட்டுக்கு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது. #PMModi #TN #ParliamentElection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்தியில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க.வும் பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன.

    அனைத்து மாநிலங்களை சேர்ந்த மாற்று கட்சிகளை ஒன்றுதிரட்டி மாபெரும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் முயற்சியில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு ஒருபுறம் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்கிடையில், பா.ஜ.க.வின் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் முதல்கட்டமாக உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

    மேலும், மாநிலவாரியாக பா.ஜ.க. நிர்வாகிகளையும், பூத் ஏஜென்ட்டுகள் மற்றும் தொண்டர்களுடன் காணொலி மூலம் பேசி தேர்தல் பணிகளுக்கு தயாராகுமாறு ஆலோசனை வழங்கி வருகிறார். அவ்வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகளுடனான காணொலி ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது.

    இதைதொடர்ந்து, நாட்டின் தென்மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு பலம் சேர்க்கும் வகையில் இப்பகுதிகளில் மோடி அதிகமான பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு பேசும் வகையில் அவரது சுற்றுப்பயணம் தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், தென்மாநிலங்களில் முதல்கட்டமாக வரும் ஜனவரி மாதம் 6-ம் தேதி கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார்.

    பின்னர், ஜனவரி 27-ம் தேதி திருச்சூர் மாவட்டத்தில் நடைபெறும் பா.ஜ.க. இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்க வருகிறார். இந்த பயணத்தின்போது தமிழ்நாட்டில் ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி உரையாற்றும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பா.ஜ.க. வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன.

    இந்த தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் தேதி இறுதிசெய்யப்பட்ட பின்னர் இதற்கான முறையான அறிவிப்பை விரைவில் தமிழ்நாட்டு பா.ஜ.க. அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி வராததும், புயல் பாதிப்புக்கான இழப்பீட்டு தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதும் தமிழக மக்களின் உணர்வுகளை ஒட்டுமொத்தமாக பாதித்துள்ள நிலையில் மோடியின் தமிழக வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #PMModi #TN #ParliamentElection
    Next Story
    ×