search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இண்டர்போல்
    X

    மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இண்டர்போல்

    வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான மெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. #RedCornerNotice #MehulChoksi
    புதுடெல்லி:

    குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.  இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.



    இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி சர்வதேச போலீசை (இண்டர்போல்) சிபிஐ கேட்டுக்கொண்டது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்ற இண்டர்போல், மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இத்தகவலை சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள் இன்று தெரிவித்துள்ளார்.

    தன் மீதான வழக்குகள் அனைத்தும் அரசியல் சதியின் விளைவு என்று மெகுல் சோக்சி கூறியதாகவும், இந்தியாவில் சிறைச்சாலையில் உள்ள வசதிகள், தனது பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது தப்பி ஓடியவர்களை கைது செய்வதற்காக இண்டர்போல் தனது உறுப்பு நாடுகளுக்கு அனுப்பும் சர்வதேச கைது வாரண்ட் ஆகும். குற்றம் சாட்டப்பட்டவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சொந்த நாட்டுக்கு அவரை கடத்த வேண்டும். #RedCornerNotice #MehulChoksi

    Next Story
    ×