என் மலர்
செய்திகள்

கேரளாவில் கண்ணூர் விமான நிலையம் திறப்பு - அபுதாபிக்கு முதல் விமானம் பறந்தது
கேரள மாநிலம், கண்ணூரில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தை மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். #KannurAirportcommence #KannurInternationalAirport
திருவனந்தபுரம்:
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் டாட்டா நிறுவனத்தின் சார்பில் உள்நாட்டு பயணிகள் விமானம் இயக்கப்பட்ட காலகட்டத்தில் கேரள மாநிலம் கண்ணூர் நகருக்கு விமானங்கள் வந்து சென்றன.
அதன் பின்னர் இந்த பகுதிக்கு நேரடியாக விமானச் சேவைகள் கிடைக்கும் வகையில் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கண்ணூரில் சர்வதேச விமான நிலையம் கட்டுவதற்கு மத்திய அரசு கடந்த 2008-ம் ஆண்டு அனுமதி அளித்தது.

இதைதொடர்ந்து, இங்குள்ள மாட்டானூர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கும் பணிகளுக்கு 17-12-2010 அன்று அந்நாள் கேரள முதல் மந்திரி அச்சுதானந்தன் அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், இந்த சர்வதேச விமான நிலையத்தை மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 ரக விமானம் இங்கிருந்து அபுதாபிக்கு இன்று காலை 10.13 மணிக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது.

ஏற்கனவே, கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய நகரங்களில் மூன்று சர்வதேச விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கண்ணூரையும் சேர்த்து இந்தியாவில் 4 சர்வதேச விமான நிலையங்களை கொண்ட இந்தியாவின் ஒரே மாநிலமாக கேரளா உள்ளது குறிப்பிடத்தக்கது. #KannurAirportcommence #KannurInternationalAirport
Next Story