search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் புதிய திருப்பம் - இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் அரசு உத்தரவு
    X

    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் புதிய திருப்பம் - இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் அரசு உத்தரவு

    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் புதிய திருப்பமாக துபாயில் வசிக்கும் இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் அரசு உத்தரவு பிறப்பித்தது. #ChristianMichel #Dubai #India #HelicopterDeal
    துபாய்:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது முக்கிய தலைவர்கள் பயணிப்பதற்காக இந்திய விமானப்படைக்கு 3,600 கோடி ரூபாய் மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற இத்தாலி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் ரூ.423 கோடிக்கு ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

    இதில் 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ஹெலிகாப்டர் பேரத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் (வயது 54) கடந்த 5 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறார்.

    இவரை விசாரணைக்காக அனுப்பி வைக்குமாறு இந்திய அரசின் சார்பில் துபாய் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக துபாய் துறைமுக பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் துபாய் மேல் நிலை நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதமே அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதுகுறித்த முறையான அறிவிப்பு தங்களுக்கு கிடைக்கவில்லை என ஜேம்ஸ் மைக்கேல் தரப்பு வக்கீல் தெரிவித்தார். இதை மறுபடியும் விசாரித்த துபாய் நீதிமன்றம், ஜேம்ஸ் மைக்கேலை நாடுகடத்தும் உத்தரவுக்கான அறிக்கையை அளித்தது.

    சர்வதேச விவகாரம் என்பதால் துபாய் அரசும், ஜேம்ஸ் மைக்கேலை இந்தியாவுக்கு நாடு கடத்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. இதனை அடுத்து இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பில் அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    மைக்கேல் வந்த விமானம், நேற்று இரவு 10.35 மணிக்கு டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அங்கு மைக்கேலை சி.பி.ஐ. முறைப்படி கைது செய்தது. #ChristianMichel #Dubai #India #HelicopterDeal
    Next Story
    ×