search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டல்- பழ வியாபாரி கைது
    X

    மாணவியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டல்- பழ வியாபாரி கைது

    ரூ.20 லட்சம் கேட்டு மாணவியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியுடுவதாக மிரட்டிய பழ வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #FacebookLove
    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி ஆட்டோ நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர், திருப்பதி ரெயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், ஆந்திர மாநிலம் மேற்குக் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பேஸ்புக் மூலமாக தகவல்களை பரிமாறி கொண்டனர்.

    காதலன் நாகராஜை சந்திப்பதற்காக இளம்பெண், சித்தூர் மாவட்டம் சந்திரகிரி மண்டலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தங்கி கல்லூரியில் படித்து வந்த மாணவி, அடிக்கடி நாகராஜை நேரில் சந்தித்து, தனது காதலை வளர்த்து வந்தார்.

    மாணவி அணிந்திருந்த நகைகளை, நாகராஜ் கேட்டு வாங்கி கொண்டார். 3 மாதங்களுக்கு முன்பு மாணவியை திருப்பதிக்கு அழைத்துச் சென்ற நாகராஜ், அங்கு ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினார். விடுதி அறையில் தங்கியிருந்தபோது, மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரை செல்போன் மூலமாக பல கோணங்களில் நிர்வாணப் படங்களை எடுத்துள்ளார்.

    அந்தப் படங்களை மாணவியிடம் காண்பித்து, ‘‘எனக்கு உன் பெற்றோரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை வாங்கி தர வேண்டும். இல்லையெனில், நான் உன்னுடைய நிர்வாணப் படங்களை பேஸ்புக்கில் வெளியிடுவேன்’’ எனக்கூறி மாணவியை மிரட்டி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு ஏற்படும் போதெல்லாம், மாணவியை அவர் பலமுறை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்தத் தகவலை மாணவி, தன்னுடைய உறவினர் ஒருவரின் மூலமாக பெற்றோர் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனடியாக பெற்றோர், மேற்குக் கோதாவரி மாவட்ட போலீசில் நாகராஜ் மீது புகார் செய்தனர். அவர் மீது அங்கு வழக்குப்பதிவு செய்ததை, அந்த மாவட்ட போலீசார், சந்திரகிரி போலீசுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் சந்திரகிரி போலீசார், நாகராஜை கைது செய்தனர். அவரை, திருப்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    நாகராஜ் கைதான தகவலை கேள்விப்பட்ட அவருடைய தாயார் நவநீதம்மாள் இரவு திருப்பதி போலீஸ் நிலையம் எதிரே வந்து, மகனை விடுவிக்கக்கோரி தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #FacebookLove
    Next Story
    ×